நீட் ஏற்படுத்தும் பாதிப்புகள்: ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சொல்வதென்ன?
நீட் தேர்வில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்த செய்திகள் நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கின்றன. இது குறித்துத் தீவிரமாக விசாரிக்கவிருப்பதாக மகாராஷ்டிர அரசு கூறுகிறது. நீட் தேர்வின் முறைகேடுகள் பற்றிப் பிற மாநில ஊடகங்களும் கட்சிகளும் விவாதித்துக்கொண்டிருக்கையில் நீட் தேர்வே
தேவையில்லை என்று தமிழ்நாடு போராடிக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வதோ அதிலிருந்து விலக்குப் பெறுவதோ மாநில அரசின் கையில் இல்லை என்பதால் அதிலிருந்து விலக்குக் கோரும் தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றியிருக்கிறது.
நீட்டை அரசியல் களத்தில் மட்டுமில்லாமல் ஆய்வுக் களத்திலும் எதிர்கொள்ளும் முகமாகத் தமிழக அரசு முனைந்துள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து, நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை அந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது.
தமிழ்வழி மாணவர்களுக்குப் பாதிப்பு
students
நீட் தேர்வு தமிழ்வழி மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அறிக்கை கூறுகிறது. நீட் தேர்விற்கு முன்பாக 2016-17 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் சேர்க்கையில் 537-ஆக இருந்த தமிழ்வழி படித்த மாணவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வு வந்த பிறகு 2017-18 கல்வியாண்டில் 56 ஆகக் குறைந்துள்ளது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2020-21 கல்வியாண்டில் 82 பேரும் (92.5%), அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட
7.5% இடஒதுக்கீட்டின் படி 217 பேரும் என மொத்தம் 299 மாணவர்களே தமிழ்வழியில் படித்தவர்கள். நீட் வருவதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட தமிழ் வழி மாணவர்கள் மருத்துவம் படித்துவந்தார்கள். இப்போது இடஒதுக்கீடு வழங்கியும் அதில் பாதியளவு மட்டுமே சாத்தியமாகியிருக்கிறது.
மாநிலப் பாடத்திட்டத்திற்குப் பின்னடைவு
நீட்டால் ஏற்பட்ட இன்னொரு பிரச்சினை மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு. 2016-17ஆம் ஆண்டில் மருத்துவக் கல்விக்குச் சென்றவர்களில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்தவர்களின் எண்ணிக்கை 3544ஆக இருந்தது. நீட் தேர்விற்கு பிறகு இது குறைந்துவருகிறது (2017-18இல் 2303, 2019-20இல் 2762).
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்களில் மருத்துவக் கல்விக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை நீட் தேர்வுக்கும் முன்பு 10க்கும் குறைவாக இருந்தது. நீட் தேர்விற்குப் பிறகு ஆயிரத்திற்கும் மேல் சென்றுள்ளது.
நீட் தேர்விற்கு முன்பாக 2016-17இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் 65.66%. நீட் தேர்விற்குப் பிறகு 2020-21இல் இது 43.13% ஆகக் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் 0.39% ஆக இருந்த சிபிஎஸ்இ மாணவர்களின் எண்ணிக்கை 26.83% ஆக உயர்ந்துள்ளது.
நீட்: ஆங்கில வழிக் கல்விக்கு ஜே!
students 2
நீட் தேர்வுக்குப் பிறகு தமிழ் வழியில் படித்தவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது குறைந்துள்ளது. 2016-17இல் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழ் வழியில் பயின்றவர்களின் சதவீதம் 12.14 ஆக இருந்தது. 2020-21இல் இது வெறும் 1.7 சதவீதம்.
ஆங்கில வழி பயின்றவர்களின் பங்கு நீட் வருவதற்கு முன்பு அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 84.12 சதவீதமாக இருந்தது.
தமிழ் வழி பயின்றவர்களின் பங்கு 14.88 சதவீதமாக இருந்தது. நீட் வந்த பிறகு 2020-21இல் ஆங்கில வழி பயின்றவர்கள் சதவீதம் 98.01% ஆக அதிகரித்துள்லது. தமிழ் வழி பயின்றவர்களின் சதவீதம் வெறும் 1.99 ஆகக் குறைந்துள்ளது.
கிராமப்புற மாணவர்களுக்குப் பின்னடைவு
நீட்டுக்கு முன்பாக 2016-17இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களின் சதவீதம் 65.17 ஆக இருந்தது. நீட் தேர்விற்கு பிறகு இது 49.91 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருந்த நகர்ப்புற மாணவர்களின் பங்கு 34.83 சதவீதத்திலிருந்து 50.09 சதவீதமாக ஆக உயர்ந்துள்ளது.
நீட் தேர்வுக்குப் பிறகு முதல் தலைமுறைப் பட்டதாரிகள் மருத்துவக் கல்வியில் சேரும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2016-17இல் அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் பங்கு 18.26 சதவீதமாக இருந்தது, 2020-21இல் இது 10.46 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவர்கள் மருத்துவக் கல்வி பெறும் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. நீட் தேர்வுக்கு முன் 2016-17இல் இவர்கள் எண்ணிக்கை 47.42 சதவீதமாக இருந்தது. நீட் தேர்வுக்குப் பிறகு 2020-21இல் இது 41.05 சதவீதமாகக் குறைந்துள்ளது.
நீட் தேர்விற்கு முன்பாக, மருத்துவக் கல்லூரிகளில் 87.53 சதவீதம் பேர் அதே ஆண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள். மீண்டும் முயற்சிப்பவர்கள் 12.47%. 2020-21ஆம் ஆண்டில் அதே ஆண்டில் பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் சதவீதம் 28.58 ஆக மாறிவிட்டது. மீண்டும் முயற்சிப்பவர்கள் 71.42%.
நீட் தேர்விற்கு பிறகு மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் இடங்களைப் பெற முடிகிறது என்பதையே இது காட்டுகிறது.
நீட் பயிற்சி வகுப்புகளுக்காக மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை செலவிடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்படியாக, தமிழ் வழிக் கல்வி பெறும் மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள், கிராமப்புற மாணவர்கள், மாநிலப் பாடத் திட்டத்தில் படிப்பவர்கள், வசதியற்றோர் எனப் பல தரப்பினரையும் நீட் தேர்வு பாதித்திருப்பதை ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது. நீட் தேர்வு இந்தப் பிரிவுகளின் கீழ் வரும் அனைவரையும் ஒட்டுமொத்தமாகப் பாதித்திருக்கிறது என்பதும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், ஆங்கில வழிக் கல்வி பயில்பவர்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்போர் ஆகிய பிரிவினருக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது என்பதையும் அறிக்கையில் உள்ள புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தமிழகம் நீட் தேர்வை எதிர்ப்பது ஏன் என்பதற்கான பதிலாக இந்த அறிக்கை அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
No comments:
Post a Comment