இனிமேல் இந்த விஷயத்துக்கும் கிராம சபை தான்; ராமதாஸ் பலே ஐடியா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, October 3, 2021

இனிமேல் இந்த விஷயத்துக்கும் கிராம சபை தான்; ராமதாஸ் பலே ஐடியா!

இனிமேல் இந்த விஷயத்துக்கும் கிராம சபை தான்; ராமதாஸ் பலே ஐடியா!


மது விலக்கை தீர்மானிக்கும் அதிகாரத்தை கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் வரலாற்றில் கிராமசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஒருவர் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், கிராம சுயராஜ்யம் குறித்தும், கிராமங்களின் தேவைகளை நிறைவேற்றுவது குறித்தும் பேசியிருக்கிறார். இதை கிராமங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான நல்லத் தொடக்கமாகக் கருதலாம். அதேநேரத்தில் கிராமங்களுக்கு தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அதிகாரமும், தேவையற்ற தீமைகளை கிராமங்களுக்குள் அனுமதிக்க விடாமல் தடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். அதுவே உண்மையான கிராம சுயராஜ்யமாகும்.
ஒட்டுமொத்த தமிழகமும், குறிப்பாக கிராமப்புறங்கள், இன்றைய நிலையில் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்சினை மது தான். மதுவின் தீமைகள் குறித்தும், அதனால் இன்றைய தலைமுறை சீரழிந்து வருவது குறித்தும் ஆயிரமாயிரம் முறை கூறி விட்டேன். ஆனாலும் மதுவின் தீமையிலிருந்து தமிழ்நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான முயற்சிகளை எடுக்க ஆட்சியாளர்கள் மனதளவில் நினைத்துக் கூட பார்ப்பதில்லை.
மதுவால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை. கிராமங்களுக்கு சென்றால் 10 வீடுகள் கொண்ட தெருவில் குறைந்தது 2 அல்லது 3 குடும்பங்களாவது மதுவால் பாதிக்கப்பட்டு சீரழிந்தவையாக இருக்கும். இந்தியாவில் அதிக இளம் விதவைகளைக் கொண்ட மாநிலமாகவும், அதிக விபத்துகள் மற்றும் தற்கொலைகள் நிகழும் மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்வதற்கு காரணம் மது தான். பள்ளிகளுக்குச் செல்லும் பதின்வயது பாலகர்கள் கூட வகுப்பறைகளில் மது அருந்திய நிகழ்வுகள் கொரோனா காலத்திற்கு முன்பு வரை செய்திகளில் வந்து கொண்டு தான் இருந்தன. கொரோனா காலத்தில் குடும்பங்களின் வருவாய் குறைந்தாலும், குடிப்பதற்கான செலவுகள் குறையவில்லை. அதனால், பல லட்சக்கணக்கான குடும்பங்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் பசியால் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
மதுக்கடைகளை மூட ஆணையிட வலியுறுத்தி தொடரப்பட்ட பொதுநலவழக்கில் 2019-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த நீதிபதிகள்,‘‘ மதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்து விட்டது. இனிவரும் தலைமுறைகளையாவது காப்பாற்ற வேண்டும். மதுக்கடைகளுக்கு எதிராக கிராமசபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை மதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினர். மக்களின் கருத்துகள் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும் மரியாதை வைத்துள்ள தமிழ்நாடு அரசு இந்த யோசனையையும் மதித்து செயல்படுத்த முன்வர வேண்டும்.
மதுக்கடைகளை மூடினால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை பா.ம.க. தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் தொடர்ந்து ஆக்கப்பூர்வ ஆலோசனை வழங்க பா.ம.க. தயாராக உள்ளது. இவற்றையெல்லாம் கடந்து மக்களாட்சியில் மக்களின் விருப்பமே முக்கியமாகும். எனவே, கிராமப்பகுதிகளில் மதுக்கடைகள் வேண்டாம் என்று குறிப்பிட்ட அளவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உடனடியாக கிராமசபைகளைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad