சீன மாநகரம் ஒன்றில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, November 11, 2021

சீன மாநகரம் ஒன்றில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

சீன மாநகரம் ஒன்றில் 116 ஆண்டுகளில் இல்லாத பனிப்பொழிவு

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் நூற்றாண்டு காணாத கடும் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது.

கடந்த காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள இப்பகுதியில் இந்த பனிப்பொழிவுக்கு இடையில் வீடுகளை வெப்பமூட்டுவது குறித்த கவலை எழுந்துள்ளது.
 
ஷென்யாங் மாகாணத் தலைநகர் லியாவ்னிங் இப்படி கடும் பனிப்பொழிவை சந்தித்து வருகிறது. இந்நகரில் சராசரி பனிப்பொழிவு 51 செ.மீ. உயரத்தை அடைந்துள்ளது.
 
1905ம் ஆண்டு முதல் பதிவானதிலேயே மிக அதிகமான பனிப்பொழிவு இதுவாகும் என்கிறது அரசு ஊடகமான ஜின்ஷுவா.
 
இந்த மாகாணத்துக்கு அருகே உள்ள மங்கோலியாவின் உள் பகுதிகளில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டு அதில் 5,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் இறந்துவிட்டார்.
 
இது மிகவும் பரவலான, மிகவும் தீவிரமான காலநிலை நிகழ்வு இது என்று மங்கோலியாவின் டாங்லியாவ் நகர வானிலை ஆய்வாளர்கள் மற்றொரு அரசு ஊடகமான குளோபல் டைம்சிடம் கூறியுள்ளார்கள்.
 
வடகிழக்கு சீனாவிலும், மங்கோலிய உள்பகுதியிலும் 27 முறை பனிப்புயல் தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்தப் பனிப்பொழிவால் சீனாவின் வடகிழக்குப் பகுதியில் பல இடங்களில் வெப்பநிலை திடீரென 14 டிகிரி அளவுக்கு குறைந்துவிட்டது.
லியாவ்னிங் மாகாணத்தில் பெய்த கடும் பனிப்பொழிவால் செவ்வாய்க்கிழமை பெரும்பாலான எக்ஸ்பிரஸ் சாலை சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன.
 
ரயில் மற்றும் பேருந்து நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. விதிவிலக்காக டாலியன் மற்றும் டான்டோங் நகரங்களில் மட்டுமே அவை திறந்திருந்தன.
 
நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து, மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் வீடுகளை வெப்பமூட்டுவதற்கான மின்சாரம் தொடர்ந்து கிடைக்கச் செய்ய தீவிர முயற்சிகள் செய்யப்பட்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
நிலக்கரி விலை உயர்வால், அதன் வரத்து குறைத்து, மின்வெட்டு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீனாவின் வடகிழக்குப் பகுதியும் ஒன்று என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
இப்போது மின் பற்றாக்குறை குறைந்துள்ளது. ஆனாலும், ஓரளவு பற்றாக்குறையுடன் கூடிய நெருக்கடியுடன்தான் குளிர்காலத்தைக் கடக்கமுடியும் என்று அரசு மின் தொகுப்புக் கழகம் எச்சரித்துள்ளது.
 
சீனா தன் மின் தேவைகளுக்கு மிக அதிக அளவில் நிலக்கரியை நம்பி உள்ளது. ஆனால், கார்பன் உமிழ்வின் உச்ச நிலையை நாடு 9 ஆண்டுகளில் எட்டும் என்றும் அதன் பிறகு கார்பன் உமிழ்வு அளவு குறையத் தொடங்கும் என்றும் சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad