உதவி கேட்ட ராஜேந்திர பாலாஜி?; 2 பேரை தூக்கிய போலீஸ்!
மாறு வேடங்களில் சுற்றி வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரகசிய உதவி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து 2 பேரை தூக்கி சென்ற போலீசார் தங்களது பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே இன்று முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது, ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாஜக ஆதரவோடு சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கட்டமைத்துள்ளதாக கூறப்படும் கைலாசா நாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி போயிருக்கலாம் என்றும், அங்கு சென்றால் தமிழக போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைக்க கூடும் என்றும் பேசப்பட்டது.
இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக திடீரென தகவல் பரவியது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை போனில் அழைத்து, சட்ட உதவி கேட்டதாக கூறப்படுகிறது. .
இதையடுத்து மதுரை சரக டிஐஜி காமினி தலைமையிலான தனிப்படை போலீசார் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல் விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் மற்றும் அவரின் சகோதரர்கள் 4 பேர் விசாரணைக்காக வந்துள்ளனர். இதன் மூலம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் விறுவிறுப்பு கூடியுள்ளது.
No comments:
Post a Comment