தள்ளிப் போகிறதா பொதுத்தேர்வு? பள்ளிக் கல்வித்துறை முக்கிய முடிவு!
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஓராண்டிற்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சேதமடைந்த நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
அதேசமயம் காலதாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் சுமையை குறைக்கும் வண்ணம் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இவை உரிய நேரத்தில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இத்தகைய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தி முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.
அதில், செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி மாதம் நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் பொதுத்தேர்வு நடத்துவதற்கு நல்ல நிலையில் இருக்கும் கட்டிடங்கள் குறித்து பட்டியல் தயார் செய்வது பற்றியும் விரிவாக பேசப்படும் என்று தெரிகிறது. அதுமட்டுமின்றி குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பது, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வுகள் நடத்த முடியுமா? இல்லை தள்ளி வேண்டுமா? என்பது பற்றியும் ஆலோசனை நடத்துகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தற்போது வரை இரண்டு முறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கொரோனா பரவல் ஒருபக்கம், ஒமைக்ரான் மறுபக்கம் என வேகமாக பரவி வருகிறது.
இதனால் முகக்கவசம் அணிதல், போதிய சரீர இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று அதிகரித்தால் மற்ற மாநிலங்களை போல இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தமிழகத்தில் விதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் தற்போது அரையாண்டு விடுமுறையில் இருக்கும் பள்ளிகளை ஜனவரியில் மீண்டும் திறக்க முடியாத சூழல் ஏற்படும்.
எனவே ஆன்லைன் கல்வி, ஆன்லைன் தேர்வு என மாற்று நடவடிக்கைகளை கையாள வேண்டி வரும். ஒட்டுமொத்தமாக ஒமைக்ரான் பரவலை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment