கட்டுக்கடங்காமல் பரவும் ஒமைக்ரான் - லாக்டவுனை நோக்கி இந்தியா?
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்தியாவில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவிலும் கால் பதித்து விட்டது. மஹாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 7,189 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 7,286 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது நாடு முழுவதும் 77 ஆயிரத்து 32 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோரின் எண்ணிக்கை 415 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 108 பேருக்கும், டெல்லியில், 79 பேருக்கும், குஜராத் மாநிலத்தில், 43 பேருக்கும், தெலங்கானா மாநிலத்தில், 38 பேருக்கும், கேரள மாநிலத்தில், 37 பேருக்கும், தமிழகத்தில், 34 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில், 31 பேருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில், 22 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 415 பேரில், 115 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக, ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஒமைக்ரான் தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment