ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 15, 2021

ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரான் திரிபு இதுவரை இல்லாத விகிதத்தில் பரவுகிறது - உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் உலகம் முழுக்க பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகம் முழுக்க 77 நாடுகளில் பெரிதும் மாற்றமடைந்த ஒமிக்ரான் திரிபு பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திரிபு உலகின் மற்ற பல நாடுகளிலும் பரவி இருக்கலாம், ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

ஒமிக்ரான் திரிபை எதிர்கொள்ளப் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். "கொரோனா வைரஸை குறைத்து மதிப்பிடுவதை நாம் இப்போது அறிந்து கொண்டோம். ஒமிக்ரான் திரிபு குறைந்த அளவுக்கு கடுமையான நோயை ஏற்படுத்தினாலும், நோயாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, தயாராக இல்லாத சுகாதார அமைப்புகளை மீண்டும் நிறைத்துவிடும்" என்று அவர் கூறினார்.
ஒமிக்ரான் திரிபு முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது, அப்போதிலிருந்து கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் அதிபர் சிரில் ரமபோசாவே கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, தற்போது லேசான அறிகுறிகளோடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஒமிக்ரான் தோன்றியதிலிருந்து தென்னாப்பிரிக்காவையும் அதன் அண்டை நாடுகளையும் பாதிக்கும் வகையில் பல நாடுகள் பயணத் தடைகளை அறிமுகப்படுத்தின, அந்நடவடிக்கைகள் ஒமிக்ரான் திரிபு உலகம் முழுவதும் பரவுவதைத் தடுக்கவில்லை.
செவ்வாயன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட, உலக நாடுகள் மத்தியில் உள்ள நியாயமற்ற தடுப்பூசி விநியோகம் தொடர்பான கவலைகளையும் வெளிப்படுத்தினார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். மறுபக்கம் சில நாடுகள் ஒமிக்ரான் திரிபை சமாளிக்க பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தி வருகின்றன.
ஒமிக்ரான் திரிபுக்கு எதிராக, ஃபைசர் பயோஎன்டெக் தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட பிறகும் குறைவாகவே நியூட்ரலைசிங் ஆன்டிபாடிகள் எனப்படும் கொரோனாவை செயலிழக்க வைக்கும் நோய் எதிர்ப்பான்கள் உற்பத்தியாவதாகக் கூறுகின்றன சமீபத்திய ஆய்வுகள். இந்த பற்றாக்குறை மூன்றாவது டோஸ் தடுப்பூசி அல்லது பூஸ்டர் டோஸ் மூலம் ஈடுசெய்யலாம் என அவ்வாய்வுகள் கூறுகின்றன.
பூஸ்டர் டோஸ்கள் கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கலாம் என டெட்ரோஸ் கூறினார். ஆனால் பூஸ்டர் செலுத்த யாருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதே கேள்வி எனக் கூறினார். (பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கையைக் கடந்தபின்னும், மேலதிகாலமாக வழங்கப்படும் 'ஊக்குவிப்பு' டோஸ், ஆங்கிலத்தில் 'பூஸ்டர் டோஸ்' என்று அழைக்கப்படுகிறது.)
"யாருக்கு முதலில் செலுத்த வேண்டும் என்கிற வரிசை முக்கியமானது. கடுமையான நோய்த் தொற்று ஏற்பட அல்லது இறப்பு அபாயம் குறைவாக உள்ளோருக்கு பூஸ்டர்கள் செலுத்துவது, தடுப்பூசி விநியோகப் பிரச்னை காரணமாக தங்களின் முதல் டோஸ் தடுப்பூசிக்காக அதிக அபாயத்தோடு காத்திருப்போரை மேற்கொண்டு அபாயத்தில் ஆழ்த்தும்" என்று கூறினார் டெட்ரோஸ்.
உலக நாடுகளுக்கு தடுப்பூசிப் பகிர்வு திட்டமான கோவேக்ஸ் மூலம் தடுப்பூசி விநியோகங்கள் சமீபத்திய மாதங்களில் அதிகரித்துள்ளன. ஆனால், இந்த ஆண்டின் மத்தியில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது (இந்தியா தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியது) போல, பல மில்லியன் டோஸ் தடுப்பூசி பற்றாக்குறை மீண்டும் ஏற்படலாம் என உலக சுகாதார அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
இன்னமும் ஏழை நாடுகளில், சில பாதிக்கப்படக்கூடிய மக்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்தப்படாமல் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad