குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவன் - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் பகுதியில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது. இந்த மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எஃப்.) துப்பாக்கிச் சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கடந்த மாதம் 30 ஆம் தேதி துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, துப்பாக்கியில் இருந்து சென்ற குண்டு ஒன்றரை கி.மீ., தொலைவில் நார்த்தாமலை பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் பாய்ந்துள்ளது. அந்த வீட்டில் புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் உணவருந்திக் கொண்டு இருந்துள்ளார். துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையத்தில் இருந்து சென்ற குண்டானது அச்சிறுவனின் தலையில் பாய்ந்துள்ளது.
இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில், சிறுவன் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அச்சிறுவன் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த சிறுவன் புகழேந்தி தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், விசாரணை முடிவில் சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
No comments:
Post a Comment