சீட்டு வாங்குறது முக்கியமில்ல; ஜெயிக்கனும் குமாரு: தை அமாவாசையில் முடிவுக்கு வருமா அதிமுக-பாஜக பேச்சுவார்த்தை?
அதிமுக - பாஜக இடப்பங்கீடு பேச்சுவார்த்தை தை அமாவாசை நாளான இன்று முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 1,064 மாநகராட்சி உறுப்பினர்கள், 8,288 பேரூராட்சி உறுப்பினர்கள், 3,468 நகராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய போதிலும், அரசியல் கட்சிகளிடையே இடப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் சுமூகமாக முடிவடையாததால், வேட்மனுத்தாக்கலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிமுக - பாஜக கூட்டணி இடையே கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அதிமுக தரப்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், பி.எச்.பாண்டியன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பாஜக தரப்பில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, மேலிடப் பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதில், தங்களுக்கு சாதகமான பட்டியலை பாஜக தரப்பில் அதிமுகவிடம் அளித்துள்ளனர். ஆனால், அதிமுக தரப்பில் குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது. கோவை, திருப்பூர், மதுரை புறநகர் சுமார் 13 மாவட்டங்களில் தங்களுக்கு சாதகமான நிலை இருப்பதாக கூறி அந்த இடங்களில் அதிக இடங்களை கேட்பதாகவும், மற்ற இடங்களில் பாஜகவுக்கு சாதகமான வார்டுகளை மட்டும் ஒதுக்கினால் போதும் என கேட்பதாக தெரிகிறது. மேலும், கோவை, நெல்லை உள்பட செல்வாக்காக இருக்கும் பகுதிகளை காட்டி, 3 மாநகராட்சி மேயர் இடங்களையும் பாஜகவினர் கேட்பதாக தெரிகிறது.
இதுகுறித்து பாஜக வட்டாரங்களிடம் விசாரித்தபோது, எங்களுக்கு சாதகமாக இருக்கும் இடங்களைத்தான் கேட்கிறோம். இது தொடர்பான பட்டியலையும் கொடுத்துள்ளோம். ஆனால், 10 சதவீதத்துக்கும் குறைவான இடங்களை ஒதுக்கவே அதிமுக தலைமை விருப்பம் காட்டுவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அதிமுக தரப்பில் விசாரித்தபோது, “அவர்கள் கேட்கும் இடங்களையெல்லாம் கொடுக்க முடியாது. சீட் வாங்குவது முக்கியமல்ல. வெற்றி பெற வேண்டும். கேட்பது அவர்கள் உரிமை. ஆனால், அவர்கள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்தால் அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தி ஏற்படும். இதனால், யாருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விடாத வண்ணம் சுமூகமான முடிவெடுக்கவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடபெற்று வருகிறது. அதேசமயம், கூட்டணியில் பாஜகவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் பேச்சுவார்த்தை முடியும் என்கின்றனர்.
அமாவாசை தினமான இன்று அதிமுக - பாஜக இடையேயான இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை எப்படியும் நல்ல முடிவுக்கு வரும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment