பொங்கல் பரிசு தொகை - அமைச்சர் திடீர் விளக்கத்தால் பரபரப்பு!
பொங்கல் பரிசு தொகை வழங்காததற்கான காரணம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்
பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இம்மாத இறுதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்படவில்லை. முதலமைச்சராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்று வரும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால், ரொக்கப் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:
பொங்கல் சிறப்புப் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப் பரிசு வழங்க முடியாமல் போனதற்கு அதிமுகவே காரணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment