ஜல்லிக்கட்டுக்கு புது ரூல்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

ஜல்லிக்கட்டுக்கு புது ரூல்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!

ஜல்லிக்கட்டுக்கு புது ரூல்ஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்குரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர், உதவியாளர், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதிக்கு முன் 2 நாட்களுக்குள் (RT-PCR Test) பரிசோதனை செய்து கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

*ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் ஆகிய இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், காளைகளை பதிவு செய்யும் பொழுது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.

*ஜல்லிக்கட்டில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டும். காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு அனுமதி இல்லை.

*ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

*ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு, நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பாக பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும் அடையாள அட்டை இல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


*தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப
(Total capacity) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு மிகாமல் இவற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

* அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

 வெளியூரில் வசிப்பவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் இணைய வழியாக காண அறிவுறுத்தப்படுகிறது.

* ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிக்கட்டு நெறிமுறைகள்) விதிகள், 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

மேலும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதில் துறைவாரியாக பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கால்நடை பராமரிப்புத் துறையினால் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு,

 கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் ஆணையர், அவர்கள் மாநில அளவில் ஜல்லிக்கட்டு மேற்பார்வைக் குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை மேற்பார்வையிடுதல்.

* மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்ட குழு அமைத்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் விதிகளுக்குட்பட்டு நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவுடன் கூட்டம் நடத்தி விதிமுறைகளை விளக்கி அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், பதிவுசெய்யப்பட்ட காளைகளின் பட்டியல் ஆகியவற்றின் நகல்களை வழங்க வேண்டும்.

*வருவாய் கோட்டாட்சியரின் குழு ஜல்லிக்கட்டு நிகழ்விடத்தை ஆய்வு செய்து போதுமான இடவசதி உள்ளதா என்று ஆய்வு செய்ய வேண்டும்,
*பார்வையாளர்களுக்கும், காளைகளுக்கும் இடையில் 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


கால்நடை பராமரிப்புத் துறை போதுமான அளவு கால்நடை மருத்துவ குழுவினை நிறுத்த வேண்டும். காளைகள் அனைத்தும் கட்டாயமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை உள்நாட்டின காளைகள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், மேலும் சோர்வாக, நிதானமின்றி உள்ள காளைகளை அனுமதிக்கக்கூடாது. குறிப்பாக காளைகள் மது வெறியூட்டப்பட்டுள்ளனவா என ஆராய்ந்து மது வெறியூட்டப்பட்ட காளைகளை அனுமதிக்கக்கூடாது. கால்நடை அவசர மருத்துவ ஊர்தி தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

* மக்கள் நல்வாழ்வுத் துறை போட்டியாளர்களுக்கு உடல் தகுதி பரிசோதனைகளை செய்ய வேண்டும், மது போதையில் இருப்பவர்களை கண்டிப்பாக நீக்க வேண்டும். காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவும், அவசர மருத்துவ ஊர்தியும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

* பொதுப்பணித்துறையினர் பார்வையாளர்களுக்கும், காளைகளுக்கும் இடையில் 8 அடி உயரமுள்ள இரட்டை தடுப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து சான்றளிக்க வேண்டும்.

* காவல் துறையினர் போதுமான அளவு காவலர்களை பணியில் அமர்த்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வண்ணம் பாதுகாக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா கொண்டு பார்வையிட்டு விதிமீறல்கள் விலங்குகள் துன்புறுத்தல்கள் நடக்காத வண்ணம் காக்கவேண்டும்.

* தீயணைப்புத்துறையினர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகள் மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். விலங்குகள் மீட்பில் பயிற்சி பெற்ற வீரர்களை பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும்.

* ஜல்லிக்கட்டு விழா குழுவினர் முறையாக விண்ணப்பம் செய்து முன் அனுமதி பெற்று உரிய அரசுத்துறைகளுடன் ஒத்துழைத்து மேற்கூறப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

எனவே, மேற்கண்டவாறு வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அனைத்து மாவட்ட ஆட்சியளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad