ரயில்வே தேர்வில் முறைகேடு - ரயிலை கொளுத்திய போராட்டக்காரர்கள்!
போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீஹார் மாநிலத்தில், ரயில்வே ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாணவர்கள், கடந்த 2 நாட்களாக பல்வேறு ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நவாடாவில், மாணவர்கள் ரயில் பாதை பராமரிப்பு இயந்திரத்தை தீ வைத்து எரித்தனர். மேலும், ரயில் நிலைய வளாகங்களை சூறையாடினர். இதே போல் சீதாமர்ஹி, பக்சர், முசாபர்பூர், சாப்ரா, வைஷாலி, கயா ரயில் நிலையம் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏராளமான மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று, மாணவர்களின் போராட்டம் மூன்றாவது நாளாகத் தொடர்ந்தது. கயா மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு மாணவர்கள் தீ வைத்தனர். இதனால் ரயில் பெட்டி முழுவதும் எரிந்து நாசமானது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. மேலும், ஜெகனாபாத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதாகவும், பாகல்பூரில் ரயில்களின் இயக்கத்தை தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ரயில்வே வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வை சஸ்பெண்ட் செய்வதாகவும், இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் தங்களது குறைகளை குழுவிடம் தெரிவிக்கலாம் என்றும், இந்த குழு அரசுக்கு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து பாட்னா காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆறு பயிற்சி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்றும், இதுவரை, 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment