தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: மீண்டும் அமலாகிறதா இ பாஸ் முறை? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 9, 2022

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: மீண்டும் அமலாகிறதா இ பாஸ் முறை?

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு: மீண்டும் அமலாகிறதா இ பாஸ் முறை?
தமிழ்நாட்டில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கிறார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் மற்றும் முக்கிய அதிகாரிகள், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

உலகம் முழுவதுமே கொரோனா மூன்றாவது அலை மிக வேகமாக அடித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பாரபட்சம் இல்லாமல் அனைத்துப் பகுதிகளிலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. டிசம்பர் 26ஆம் தேதி வரை, தினசரி கொரோனா பாதிப்பு 700க்கு குறைவாகவே இருந்தது. ஜனவரி 1ஆம் தேதி 1,489 பேர் பாதிக்கப்பட்டனர். ஜனவரி 9ஆம் தேதி 12 ஆயிரத்து 895 பேர் பாதிக்கப்பட்டனர்.

பாதிப்பு அதிகரிப்பால் ஜனவரி 6ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. இரவு 10:00 முதல் அதிகாலை 5:00 மணி வரை, இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள்தான் அனுமதிக்கப்படுகின்றனர். மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகள் இன்று 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வருவதால் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. பாதிப்பு ஒரு பக்கம் அதிகரிக்க பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் பேருந்து நிலையங்களிலும், சந்தைகள், கடை வீதிகளில் ஒன்றுகூட அதிக வாய்ப்புள்ளது. இதனால் தொற்றின் வேகம் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நேற்று ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அதை சனி, ஞாயிறு என இரு தினங்களுக்கு நீட்டித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad