ஹிஜாப் பிரச்சினை: உலக நாடுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது
கர்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்ததற்கிடையே, இந்து மாணவர்கள் சிலர் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் தேசிய அளவில் சர்ச்சையாகியுள்ளது.மாநிலத்தில் பதற்றத்தை தவிர்க்கும் பொருட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு ஒன்றை கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இவ்வழக்கு தொடர்பாக வருகிற திங்கள்கிழமை விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ஹிஜாப் விவகாரம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், ஹிஜாப் தடை மத சுதந்திரத்தை மீறுவதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளை களங்கப்படுத்துவதாக சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் (ஐஆர்எஃப்) தெரிவித்துள்ளது.இந்த நிலையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில், “கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் முன்வந்துள்ள ஹிஜாப் பிரச்சனை குறித்து பெங்களூரு உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பிற நாடுகள் இது போன்ற இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டாம். எங்கள் அரசியலமைப்பு, வழிமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அந்த உண்மைகளை உரியமுறையில் பாராட்டுவர்.” என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment