ஆசிரியர் தேர்வு வாரியம் கொடுத்த ஷாக்; கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!.
நெல்லையில் தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்கள் சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்விற்கு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர். மேலும் கணினி ஆசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளராகவும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் சுமார் 400 கிலோமீட்டர் தூரம் உள்ள பிற மாவட்டங்களுக்கு பணி செய்ய ஆணை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.இதனால் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஆசிரியர் விரோத போக்கிற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்களை அலைகழித்து தேர்வு பணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.12 மணி நேரத்திற்கு மேலாக தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காணொளி கூட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கண்ணியக் குறைவான வார்த்தைகளை கூறி மிரட்டப்படுவதற்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்ற தவறும்பட்சத்தில் தொடர் போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரித்தனர்.
No comments:
Post a Comment