மோடியோடு சமரசம் செய்யும் ஓபிஎஸ், இபிஎஸ்: போட்டு தாக்கும் பொன்குமார்
தமிழ்நாட்டு பிரச்சினையை விட மோடியோடு சமரசம் செய்வதில் தான் அதிமுகவினர் அதிகளவு அக்கறை காட்டி வருகின்றனர் என்று விவசாயிகள்-தொழிலாளர் கட்சி தலைவர் பொன்குமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நீட் விலக்கு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நான்கு மாத காலமாக கிடப்பில் போட்டுவிட்டு தற்போது ஆளுநர் ரவி அதை திருப்பி அனுப்பியுள்ளார். இது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் நீட் தேர்வு வேண்டாம் என ஒற்றைக் குரலில் கூறிவருகிறது. இதனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காதது புரிந்துகொள்ளக்கூடியது. அதிமுகவும் கூட்டத்தை புறக்கணித்தது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுகவுக்கு எதிரான இந்த விமர்சனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கையில், “நீட் தேர்வு விலக்கு சம்பந்தமான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அரசுக்கு அனுப்பி வைத்துள்ள செயலை தமிழகத்தின் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கண்டித்துள்ளது. சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசின் ஒப்புதலுக்காக மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான முயற்சியை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகிறோம். இந்த பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சித் தலைவர் கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ஏற்பாடு செய்தார். இந்தக் கூட்டத்தில் பாஜ கலந்து கொள்ளவில்லை. அதனைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆளுநரும் அண்ணாமலையும் இந்தப் பிரச்னையில் ஒன்றாக பயணிப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் அதிமுகவினர் தமிழக மாணவர்களின் தலையாய பிரச்னையான இந்த நீட் தேர்வு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டு பிரச்னையை விட மோடியோடு சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலேயே அக்கறை அதிகம் கொண்டவர்களாக அதிமுகவினர் உள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment