திருச்சியில் கள்ள ஓட்டு போட்ட திமுக வேட்பாளர் தகுதி நீக்கம்?
திருச்சி மாநகராட்சி 56வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி கள்ள ஓட்டு போட்டது தெரியவந்துள்ளது. இதனால், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில், திருச்சி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 65 வார்டு, துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி உள்ளிட்ட 5 நகராட்சி, 14 பேரூராட்சிகளில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 56வது வார்டு கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி தொடக்கபள்ளியில் அமைக்கபட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
இதனிடையே, அப்பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரின் வாக்கை திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி செலுத்திவிட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மஞ்சுளாதேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியது அம்பலமானது. இதனை தொடர்ந்து மற்ற கட்சி வேட்பாளர்கள் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையருக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாண்டி மீனா "உள்ளாட்சி தேர்தல் நேர்மையான முறையில் நடைபெறவில்லை எனவும், அதிகாரிகள் உடந்தையுடன் திமுகவினர் கள்ள ஓட்டு போட்டுள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் திமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment