தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் பெயர் போன பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சி இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் வியூகங்கள் வகுப்பதில் 'ஜெகஜால கில்லாடி' என்று பெயர் பெற்றவர்கள் பிகே என அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர். காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற இலக்கை வேகமாக அடைந்துவரும் பாஜகவால் திமுக, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற மாநிலங்களில் வலுவாக உள்ள கட்சிகளை தேர்தல் ரீதியாக வெற்றிக் கொள்ள இயலவில்லை.
இதற்கு மாநில சட்டமன்றத் தேர்தல்களின்போது மாநிலக் கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வகுத்து கொடுக்கும் தேர்தல் யூகங்கள் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. கடந்த 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், பிகே சொல்படி செயல்பட்டதே அக்கட்சி தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று இன்று அவர் முதல்வராக இருக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஆனால் இனி எந்த கட்சிக்கும் தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுக்கப் போவதில்லை என்று அண்மையில் பிரசாந்த் கிஷோர் அதிரடியாக அறிவித்தார். மேலும் அவர் ஏதாவதொரு அரசியல் கட்சியில் சேர்வதற்கு தீவிரம் காட்டி வருவதாகவும், குறிப்பாக அவர் காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக விரைவில் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான தமது விருப்பத்தை சோனியா, ராகுல் ஆகியோரிடம் அவர் ஏற்கெனவே நேரில் தெரிவித்துள்ளதாகவும், சோனியாவும் பிகேவை காங்கிரசில் சேர்த்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதன்படி, பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் இணைந்ததால், அவர் கட்சியில் இருந்து கொண்ட, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான புதிய வியூகங்களை வகுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் எம்பி தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடிக்கு மாற்றாக யோகி ஆதித்யநாத் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் நிலையில், காங்கிரஸுக்கு பிகே தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தால் அது பாஜகவுக்கு பெரும் சவாலாக அமையும் என்று கருதப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்த பிரசாந்த் கிஷோர், அங்கு சர்ச்சை ஏற்படவே அந்த கட்சியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment