அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல், அரசு ஊழியர்கள்வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, முதலமைச்சர் அறிவித்து உள்ளார்.
வட கிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் பாஜக, மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது. இதை அடுத்து, மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சராக, தொடர்ந்து இரண்டாவது முறையாக, பாஜகவைச் சேர்ந்த பிரேன் சிங் பதவி ஏற்றார். அவருக்கு, ஆளுநர் இல.கணேசன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், தலைநகர் இம்பாலில் உள்ள தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையில் புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர்களுக்கு, வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்யும் திட்டத்தை, வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்துவது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மணிப்பூர் மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மணிப்பூர் மாநில அரசின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்கள், ஏஜென்சிகள், அமைப்புகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் வேலை நேரம், கோடைக் காலமான மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை செயல்படும்.
குளிர் காலமான, நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, வேலை நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்கும். கோடை மற்றும் குளிர்காலத்தில் மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை இருக்கும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளிகளிலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 8 மணிக்கு பள்ளிகள் தொடங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment