கிருஷ்ணகிரி நகரில் உள்ள அனைத்து வீதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நகராட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி கவுன்சில் கூட்டம் சேர்மேன் பரிதா நவாப் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, ஆணையர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளை சேர்ந்த கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அனைவரையும் நகராட்சி ஆணையர் முருகேசன் வரவேற்றார். கூட்டத்தில் 5 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகராட்சி தேர்தலை நடத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நகராட்சியில் அலுவலக பயன்பாட்டிற்கு நகராட்சி தலைவருக்கு புதிய வாகனம் வாங்குவது, வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் அமர்ந்து பேசும் வகையில் கூடம், அடிப்படை வசதிகள் மற்றும் கழிப்பிட வசதி அமைப்பது, நகர்மன்ற கூட்டங்கள், அவசர கூட்டங்கள் நடத்த தேவையான வசதிகளுடன் கூட்ட அரங்கு அமைப்பது, நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்ள 145 கை பம்புகளுடன், 50 புதிய கைபம்புகள் அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு, சொத்துவரி மற்றும் நிலுவை தொகைகளை வசூலிப்பது, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தை ரூ.33.85 லட்சத்தில் புனரமைப்பது மற்றும் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமம், தினசரி சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ஐ.வி.டி.வி. நிறுவனம் வழங்கிய ரூ.10 லட்சத்தில் கிருஷ்ணகிரியில் அனைத்து தெருக்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது என்றும் முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பிளாஸ்டிக்கை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என வலியுறுத்தி மஞ்சப்பை இயக்கத்தை நகராட்சி தலைவர் பரிதா நவாப் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment