நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, இடதுசாரி இயக்கங்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளன.
இதனால், தமிழ்நாட்டில் போக்குவரத்து சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும், மாணவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வழக்கமாக வேலைநிறுத்தப் போராட்டங்களின் போது வங்கிச் சேவைகள் மட்டுமே பாதிக்கப்படும் நிலையில், அரசு பேருந்துகளின் சேவை முடங்கியுள்ளதால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 67 சதவீதம் பேருந்துகள் இயங்கவில்லை; மீதமுள்ள பேருந்துகள் இயங்குகின்றன என்று தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அறிவித்திருந்தாலும் கூட களநிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. 10 சதவீதம் பேருந்துகள் கூட இயக்கப்படாததால் அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியர் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒருபுறம் இந்த வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது. மற்றொருபுறம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது நகைமுரணாக உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
“தமிழக அரசு நினைத்திருந்தால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் தடுத்து இருக்கலாம். வழக்கமாக வேலைநிறுத்தங்கள் அறிவிக்கப்படும் போது போக்குவரத்து அமைச்சர், போக்குவரத்துத்துறை செயலாளர், ஆணையர், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணிமனைகளில் முகாமிட்டு பேருந்துகளின் இயக்கத்தை உறுதி செய்வார்கள். ஆனால், இம்முறை ஆளுங்கட்சி தொழிற்சங்கமே போராடுவதால் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாக முன்வந்து கூடுதல் நேரம் பணி செய்வதாக கூறிய போதிலும் அதையும் அதிகாரிகள் ஏற்கவில்லை. அதன்படி பார்த்தால் மக்களின் அவதிக்கு அரசும் மறைமுக காரணம் என்பதை மறுக்க முடியாது.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேசமயம், தமிழ்நாட்டில் 10, 12 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் இரண்டாவது திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், வேலைநிறுத்தம் காரணமாக அந்தத் தேர்வுகளில் பெரும்பான்மையான மாணவர்களால் பங்கேற்க இயலவில்லை. எனவே, தேர்வுகளை ஒத்திவைத்து விட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. நாளையும் போராட்டம் தொடரும் என்பதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து, திருப்புதல் தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment