ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை (மார்ச் 10) வெளியாகின்றன. ஆனால் அதற்கு முன்பாகவே எக்ஸ்ட் போல் முடிவுகள் முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு சாதகமான விஷயங்களை அள்ளி வீசியுள்ளன. இதன்மூலம் கடந்த 37 ஆண்டுகால உத்தரப் பிரதேச அரசியல் வரலாற்றில் மீண்டும் அந்த நாற்காலியில் அமரும் வாய்ப்பை தொடர்ந்து 2வது முறையாக பெறும் முதல் முதல்வர் என்ற பெருமையை யோகி ஆதித்யநாத் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகால யோகி ஆட்சியில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், சில சாதகமான விஷயங்களும் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடும் நெருக்கடியில் தவித்த மக்களுக்கு உ.பி., அரசு வழங்கிய இலவச ரேஷன் பெரிதும் உதவிகரமாக இருந்தது.
அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு லேப்டாப், பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கு சீருடை மானியம் உள்ளிட்டவை சாதி, மத பேதங்களை தாண்டி மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. PM கிசான் நிதி, PM உஜ்வாலா யோஜனா, ஜன் தன், PM ஆவாஸ், PM கரிப் கல்யாண் அன்ன யோஜனா போன்ற மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் அமல்படுத்தப்பட்டது பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறதாம்.
மாநில அரசின் திட்டங்களால் பெண்களின் பெரும்பாலான வாக்குகள் பாஜகவிற்கே விழும் என்று நம்பப்படும் சூழலில், கடைசி இரண்டு கட்ட தேர்தல்களில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜாதவ் அல்லாதோர் வாக்குகளில் 51 சதவீதம் இம்முறை பாஜகவிற்கு கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 31 சதவீதமாக கிடைத்த வாக்கு வங்கி, இம்முறை 20 சதவீத அளவிற்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மேற்குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அதிக அளவில் சீட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜாதவ் அல்லாதோரில் இருந்து மத்திய, மாநில அமைச்சரவையில் பலர் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
மேலும் லப்ராதி ஸ்டேட்டஸ் வழங்கப்பட்டதும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய அம்சங்கள் ஜாதவ் அல்லாத ஓபிசி வாக்கு வங்கியை பெறுவதற்கும் உறுதுணையாக விளங்குவதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக மூன்று வேளாண் சட்டங்களால் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் ஜாட் சமூகத்தினர் இருந்தனர்.
ஆனால் கடைசி நேர ட்விஸ்டாக வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றதால் பாஜகவிற்கு ஆதரவு நிலைப்பாடும் உருவாகியிருப்பதாக தெரிகிறது. அதுவும் 2017ல் கிடைத்ததை விட 4 சதவீதம் வரை அதிக ஜாட் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய அம்சங்களால் யோகி ஆதித்யநாத் மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment