விசிக தலைவர் திருமாவளவன் தூசி தட்டி கிளப்பி இருக்கும் விவகாரத்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலந்தி வலையில் சிக்கும் நிலை வந்துள்ளது. இது, திமுக தொண்டர்களை அதிருப்தி அடைய செய்துள்ள நிலையில் விசிக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சிலந்தி வலையில் சிக்க வைக்கும் விவகாரத்தை திருமாவளவன் தூசு தட்டி கையில் எடுத்துள்ளார். இந்த விவகாரம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விசிக தொண்டர்கள் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்ட மேலவை
தமிழகத்தில் கடந்த 1921ம் ஆண்டு முதல் சட்ட மேலவை அமைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடையும் வரை மேலவையில், 465 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். கடந்த 1965ம் ஆண்டு சட்டமன்ற தொகுதி வரையறைக்கு பின், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆகவும் குறைக்கப்பட்டது. இவ்வாறாக தமிழகத்தில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் சட்டசபை, மேலவை ஆகியவை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தன.
எம்ஜிஆர் எடுத்த திடீர் முடிவு
இந்த நிலையில், கடந்த 1986ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர் திடீரென சட்ட மேலவையை கலைத்தார். இதற்கான தீர்மானம் கடந்த 14-5-1986ம் அன்று சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு மக்களவை, மாநிலங்களவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் சட்ட மேலவை கலைக்கப்பட்டபோது, சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் தலைவராக இருந்தார். மேலவை எதிர்க் கட்சி தலைவராக மு.கருணாநிதி இருந்தார். இந்நிலையில் கடந்த 1989ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மேலவை கொண்டு வரும் முயற்சியை கருணாநிதி மேற்கொண்டார். இந்த தீர்மானம் கடந்த 1989ம் ஆண்டு பிப்ரவரி 20ம் அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 1990ம் ஆண்டு மே மாதம் 10ம் அன்று ராஜ்யசபாவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. மக்களவையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
கருணாநிதி முயற்சி தோல்வி
இதற்கிடையே கடந்த 1991ம் ஆண்டு தமிழகத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது. இதை அடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதிமுக ஆட்சிக்கு வந்த கையோடு திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்ட மேலவை தீர்மானத்தை ரத்து செய்து தமிழ்நாடு சட்டசபையி்ல் ஒரு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 1996ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் சட்ட மேலவை கொண்டு வர தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அதை திமுகவால் செயல்படுத்த முடியவில்லை. எனவே அடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் அந்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சட்ட மேலவை கொண்டு வரும் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆனால், செயல்படுத்துவதற்குள் அடுத்து வரும் அதிமுக அரசு அந்த தீர்மானத்தை ரத்து செய்வது தொடர்கதையாகி வந்தது.
மு.க.ஸ்டாலின் அதிரடி திட்டம்
இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை அமைக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி இருந்தார். அதாவது, கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கூட்டணி பேச்சுவார்த்தைக்காக சென்றபோது விசிகவுக்கு 12 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பரபரப்பு கருத்தை கூறி இருந்தார். அதாவது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் சட்ட மேலவை அமைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும், அப்படி அமைக்கும் போது, அதில் விசிகவுக்கு கணிசமான இடங்கள் தருவதாக மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்துள்ளதால் இந்த தொகுதி எண்ணிக்கைக்கு ஒப்புக்கொண்டோம் என திருமாவளவன் கூறி இருந்தார்.
தூசு தட்டிய திருமாவளவன்
திமுக கூட்டணி எதிர்பார்த்ததுபோலவே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்து ஏறக்குறைய ஓராண்டு நிறைவு அடைய உள்ளது. இந்த சூழ்நிலையில் தனக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி தமிழகத்தில் உடனே சட்ட மேலவை அமைக்கும் பணியை துரிதகதியில் செய்து முடிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் தான் முதல்வர் ஸ்டாலினை தற்போது நெருக்கடியில் தள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்தியில் பாஜ தலைமையினான அரசுடன் இணக்கமாக இருந்து கொண்டால் சட்ட மேலவையை சிக்கல் இல்லாமல் அமைத்துக்கொள்ள முடியும் என மு.க.ஸ்டாலின் கணக்கு போட்டு வைத்திருந்தார். ஆனால் அதுபோன்ற ஒரு சூழல் தமிழகத்தில் எழுவதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.
தமிழக அரசுக்கு நெருக்கடி
இதற்கு காரணம் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் தமிழக ஆளுநரையே மாற்ற வேண்டும் என மத்திய பாஜக அரசுக்கு தமிழக அரசு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இந்த சூழலில் சட்ட மேலவை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு இறங்குமேயானால், மத்திய அரசின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை வரக்கூடும் என்பது, தமிழக அரசின் அச்சம். ஆனால், இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் சொன்னதை செய்ய வேண்டும் என்ற ரீதியில், முதல்வருக்கு விசிக தலைவர் திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருவது திமுக மேல்மட்ட தலைவர்களை ரொம்பவே கவலை அடைய செய்துள்ளது. ஒருபுறமும் திருமாவளவனுக்கு கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பம், மறுபுறம் மத்திய அரசுடன் மோதல் போக்கு என உள்ளதால் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சி போன்று முதல்வர் ஸ்டாலின் செய்வதறியாமல் திகைத்துப்போய் உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால் தமிழக அரசு மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment