மன்னிச்சு.... மீண்டும் ஒரு சான்ஸ் கேட்கும் எஸ்.வி.சேகர்..! நீதிமன்ற ரியாக்ஷன் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, March 12, 2022

மன்னிச்சு.... மீண்டும் ஒரு சான்ஸ் கேட்கும் எஸ்.வி.சேகர்..! நீதிமன்ற ரியாக்ஷன்

பெண் பத்திரிகையாளர்களை குறித்து முகநூலில் இழிவாக பதிவிட்டதாக பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

கடந்த ஏப்ரல் 2018 இல், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தட்டி சர்ச்சையில் சிக்கினார். அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கிடையே ஆளுநரின் செயலால் கோபமடைந்த அந்த பெண் பத்திரிகையாளர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அதற்கு வருத்தம் தெரிவித்து ஆளுநரும் '' பேத்தி போல கருதி கன்னத்தில் தட்டினேன்'' என விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரம் பத்திரிகையாளர்கள் மத்தியிலும், அரசியல் கட்சிகளிடையேயும் பேசு பொருளானது. சமூக வலைத்தளங்களில் டாப்பிக்கானது. அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் போஸ்ட் போட்டிருந்தார். அது கடும் சர்ச்சையை கிளப்பியது. எஸ்.வி. சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தன. மேலும், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
அதன் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், அந்த பதிவை எஸ்.வி. சேகர் படிக்காமல் பகிர்ந்துள்ளதாகவும், இந்த செயலுக்கு அவர் மன்னிப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால், அதை ஏற்கமறுத்த நீதிபதி, செயலை செய்த பிறகு மன்னிப்பு கேட்டால் அது சிக்கலை சரிசெய்யுமா? ஒரு செய்தியை ஒருவர் பகிரும்போது அந்த செய்தியை அவர் ஏற்றுக்கொள்கிறார் அல்லது ஆதரிக்கிறார் என்றுதான் கருதப்படுகிறது." எனக்கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வந்தபோதும் எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வக்கீல், சர்ச்சைக்குரிய அந்த பதிவை ஏற்கனவே நீக்கிவிட்டோம். செயல் தொடர்பாக ஏற்கனவே ஒருமுறை நீதிமன்றத்தில் எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டுவிட்டார். மீண்டும் மன்னிப்பு கேட்பதாகவும் வாதத்தில் கூறினார். இதையடுத்து காவல்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad