கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, காணொலி காட்சி மூலம் வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு பின், அனைத்து வழக்குகளும் நேரடி விசாரணை முறைக்கு இன்று முதல் திரும்பியுள்ளது.
கொரோனா தொற்று பரவலை அடுத்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் சென்னை உயர் நீதிமன்றம், கடந்த இரு ஆண்டுகளாக காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது.
தற்போது தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்து வருவதை அடுத்து, இன்று முதல் காணொலி காட்சி விசாரணை நிறுத்தப்பட்டு, நேரடி விசாரணை துவங்கியுள்ளது.
காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை மூலம் வழக்குகள் விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், வழக்குகளை விரைந்து முடிக்க இயலவில்லை எனவும் சக நீதிபதிகள் தெரிவித்ததால், இன்று முதல் நேரடி விசாரணை துவங்கும் என தலைமை நீதிபதி முனீஷ்வர் பண்டாரி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று முதல் நேரடி விசாரணை துவங்கியது. இருப்பினும், காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவர். இதற்காக அவர்கள் அனுமதி பெற வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment