இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு இலங்கை அரசின் திறனற்ற செயல்பாடுகள்தான் காரணமென்று கூறி, லரும் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகள் பெரும் போராட்டத்தை அறிவித்துள்ளன.
இதுகுறித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ, கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது:
இலங்கையில் 1948 ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுநாள்வரை இப்படியான நிலைமை ஏற்படவில்லை. இப்படி வீழ்ச்சியடைந்துபோன அரசாங்கங்களை கண்டதில்லை. 2014 ஆம் ஆண்டு மகிந்த தோல்வியடைவதை கண்டோம்.
2014 இல் மகிந்த தோல்வியடைந்த பின்னர், 2019 ஆம் ஆண்டில் கோட்டாபய ராஜபக்சவை கொண்டு வந்தனர். கோட்டாபய ராஜபக்ச ஒரு வருடம் செல்லும் முன்னரே தோல்வியடைந்தார். நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் மூன்று பேரும் தோல்வியடைந்துவிட்டனர். அனைத்து ராஜபக்ச மூளைகளும் தோல்வியடைந்து விட்டன. நாட்டில் .உணவு, எரிபொருள், மருந்து என அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வரும் செவ்வாய்கிழமை வீதியில் இறங்கி போராட ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. வீட்டிற்குள் இருந்துக்கொண்டு ஒருவரையொருவர் குற்றம் சுமத்தாமல், வெளியில் இறங்கி போராட வாருங்கள். கஷ்டங்களை எதிர்நோக்கும் அனைவரும் செவ்வாய்கிழமை கொழும்புக்கு வாருங்கள்.
அன்றைய தினம் மக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படுவது மட்டுமின்றி ஜனாதிபதி இருக்கும் இடத்தை தேடிச் செல்வோம். மக்களின் கோரிக்கைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால், கடும் முடிவுகளை எடுப்போம் என்று ஹரின் பெர்னாண்டோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment