சீர்காழியில் கடன் தொல்லையால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்டு தாயும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி என் எஸ் பி நகரில் வசித்து வருபவர் கார்த்திக். ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி பாரதி (21), ஆண் குழந்தை கௌஷிக் (3),பெண் குழந்தை பவதாரணி (1) ஆகிய மூவரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கார்த்திக் அதிக அளவில் கடன் வாங்கி உள்ளதால் அதனை திருப்பி செலுத்த முடியாமல் வேதனை அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த தாய் பாரதி தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து வீட்டின் அறையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.
அதன்பிறகு பாரதியும் விஷமருந்தி வீட்டின் ஹாலில் உள்ள பேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக பாரதி கடிதம் ஒன்று எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், தனது கணவர் கார்த்திக்கு அதிக அளவில் கடன் இருப்பதாலும் அதனை அடைக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதற்கு வேறு ஏதும் காரணம் இல்லை எனவும், பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் காதல் கல்யாணம் செய்து கொண்டது தவறு என்று வருந்தி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், தற்கொலைக்கு முன்பாக பாரதி தனது தாய் சித்ராவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து உள்ளார். தாய் வருவதற்குள் மூன்று பேரும் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்
தாய் குழந்தை உள்ளிட்ட 3 பேரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment