ஆயுதம் தாங்கிய டிரோன்களை அளித்து உதவுமாறு சீனாவுக்கு, ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஐரோப்பிய நாடுகள் உஷாராக இருக்க வேண்டும் என அமெரிக்கா அலறியுள்ளது.
உக்ரைன் போரில், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து ஆயுதம், பொருள் உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகின்றன. மறுபக்கம் ரஷ்யா எந்த வகையிலும் சர்வதேச உதவிகளைப் பெறாத வகையில் முடக்கிப் போட அமெரிக்கா ரொம்ப மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ரஷ்யா தனது தோழனான சீனாவிடம் சில முக்கிய உதவிகளைக் கோரியுள்ளது. குறிப்பாக ராணுவ உதவியை அது கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சீனாவின் ஸ்பெஷல் ஆயுதமாகும். அவற்றை தந்து உதவுமாறு சீனாவுக்கு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளதாம். இதையடுத்து ஐரோப்பிய நாடுகளை பீதிக்குள்ளாக்கும் வகையில் பயமுறுத்த ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.
சீனாவிடமிருந்து ஆயுதம் தாங்கிய டிரோன்களை ரஷ்யா வாங்கப் போகிறது. அதை வைத்து உங்களது நாடுகளைத் தாக்கலாம். கவனமாக இருங்கள் என்று ஐரோப்பிய நாடுகளை உசுப்பி விட்டு வருகிறது அமெரிக்கா. இதற்கிடையே போர் தொடங்கியதுமே இந்த டிரோன்களை கேட்டு சீனாவை அணுகி விட்டதாம் ரஷ்யா.
நேற்றுதான் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும், சீனாவின் தூதரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்பீரோ உறுப்பினருமான யாங் ஜியச்சியும் ரோம் நகரில் சந்தித்துப் பேசினர். அப்போது, ரஷ்யாவுக்கு சீனா உதவக் கூடாது, ஆயுதம் தரக் கூடாது, தந்தால் சர்வதேச தடையை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா நேரடியாகவே எச்சரிக்கை விடுத்தது என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் ரஷ்யா, டிரோன்களைக் கேட்டுள்ளதாக தற்போது அமெரிக்கா கூறியிருப்பதை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில், அமெரிக்கா சீனாவைக் குறி வைத்து அவதூறாக செய்தி பரப்பி வருகிறது. நாங்கள் அமைதிப் பேச்சுக்களை ஆதரித்து வருகிறோம். இந்த விவகாரத்தில் அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.
இதற்கிடையே, ரஷ்யாவை அணுகி போரை நிறுத்துமாறு வலியுறுத்துமாறு சீனாவை நெருக்கி வருகிறது அமெரிக்கா. ஆனால் சீனா இந்த விஷயத்தில் ரஷ்யாவைக் கண்டிக்க முடியாது என்று ஏற்கனவே கூறி விட்டது. எனவே ரஷ்யாவிடம் போரை நிறுத்துமாறு அது கூறுமா என்று தெரியவில்லை. ஆனால் ரஷ்யாவுடன் சீனா ரகசியமாக கை கோர்த்து செயல்படுவதாக அமெரிக்கா கடுப்பாக உள்ளது. சீனா ஆயுத உதவிகளையும் செய்தால் அது ரஷ்யாவுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்றும் அமெரிக்கா பயப்படுகிறது. இதனால்தான் சீனாவை மிரட்டும் வேலையை அது செய்ய ஆரம்பித்துள்ளது.
அது என்ன ஆயுதம் தாங்கிய டிரோன்?
டிரோன்
ஆளில்லாத குட்டி விமானங்களைத்தான் டிரோன்கள் என்று சொல்கிறோம். இத்தகைய டிரோன்களை முன்பெல்லாம் உளவு பார்க்க மட்டுமே நாடுகள் பயன்படுத்தி வந்தன. அதாவது எதிரி நாட்டு எல்லைப் பகுதிக்குள் டிரோன்களைப் பறக்க விட்டு நிலைமையை கண்காணிக்க இது உதவியது. ஆனால் தற்போது டிரோன்களில் ஆயுதங்களைப் பொருத்தி தாக்குதல் நடத்தவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது மீடியம் சைஸ் போர் விமானங்கள் இவை. இதை வீரர்கள் ெசலுத்த மாட்டார்கள். மாறாக, டிரோன்களைப் போலவே இவை செயல்படும்.
சாதாரண ஆயுதங்கள் முதல் அணு ஆயுதம் வரை எல்லா வகையான ஆயுதங்களையும் பொருத்தும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. குறிப்பிட்ட இலக்கை குறி வைத்து அந்த இடத்தில் துல்லியமாக தாக்குதல் நடத்த இத்தகைய ஆயுதம் தாங்கிய டிரோன்கள் உதவுகின்றன.
உலக அளவில் அமெரிக்காதான் அதிக அளவிலான ஆயுதம் தாங்கிய டிரோன்களை வைத்துள்ளது. அதற்கு அடுத்து சீனாவிடம் ஏகப்பட்ட டிரோன் ஆயுதங்கள் உள்ளன. இதனால்தான் அமெரிக்கா பயப்படுகிறது. ஆனால் இதே அமெரிக்கா இத்தகைய ஆயுதம்தாங்கிய டிரோன்களை ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெருமளவில் பயன்படுத்தி தாக்கியுள்ளது. ஆனால் ரஷ்யா அதைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை போடுகிறது.
No comments:
Post a Comment