ஃபெயிலாகும் மருத்துவ மாணவர்கள்: வெளிநாட்டுல இருந்து வந்து என்ன பண்றாங்க? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, March 13, 2022

ஃபெயிலாகும் மருத்துவ மாணவர்கள்: வெளிநாட்டுல இருந்து வந்து என்ன பண்றாங்க?

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் சுமார் 80 சதவீதம் மாணவர்கள் இந்தியாவில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை என்கிறது தரவு
தேசிய மருத்துவ ஆணையத்தின் 2021ஆம் ஆண்டு விதிகளின்படி, அயல்நாடுகளில் மருத்துவப்படிப்பை மேற்கொண்டால், அங்குள்ள கல்லூரிகளில் 54 மாதங்கள் கல்வி பயின்றிருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் 12 மாதங்கள் பயிற்சியும் பெற்றிருப்பது அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல வெளி நாடுகளில் (அயல்நாடுகளில்) மருத்துவப் படிப்பை முடித்து இந்தியாவில் பதிவு செய்ய, அதற்கான தகுதி தேர்வை எழுதி, புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரியில் 12 மாதங்கள் பணியாற்றி இருக்க வேண்டுமெனவும் விதி வகுக்கப்பட்டுள்ளது.

சீனா, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் மருத்துவம் பார்க்க Foreign Medical Graduate Exam என்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேசமயம், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதத் தேவையில்லை.
இதனிடையே, உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அங்கு படித்து வந்த மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் படித்து வந்ததால், அவர்கள் தங்களது படிப்பை இந்தியாவிலேயே தொடர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதேசமயம், நீட் தேர்வு காரணமாகவே இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்வதாகவும், அங்கு மருத்துவப் படிப்புகள் படித்து இந்தியா திரும்பும் மாணவர்கள் இங்கு நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தேசிய தேர்வு வாரியத்தின் தரவுகள், வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் சுமார் 80 சதவீதம் மாணவர்கள் இந்தியாவில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெறுவதில்லை என்கிறது. அதாவது, 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே Foreign Medical Graduate Exam தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்கிறது அந்த தரவு.
கடந்த 2019ஆம் ஆண்டில் 25.79 சதவீத மாணவர்களும், 2020ஆம் ஆண்டில் 14.68 சதவீத மாணவர்களும், 2021ஆம் ஆண்டில் 23.83 சதவீத மாணவர்களும் மட்டுமே இந்தியாவில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மாணவர்களில் பெரும்பாலானோர் தங்களது மருத்துவராகும் கனவை புறந்தள்ளிவிட்டு, வேறு வேலைகளுக்கு சென்று விடுகின்றனர். சிலரோ தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருகின்றனர். அந்த தேர்வை இத்தனை முறைதான் எழுத வேண்டும் என்ற வரம்புகள் எதுவும் இல்லை என்பதால் அந்த சில மாணவர்கள் தொடர்ச்சியாக அந்த தேர்வை எழுதி வருவதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad