கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக, ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்து வருவதாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாக எடுக்கப்பட்டதாகக் கூறப்படும், "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்திற்கு, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் வரிவிலக்கு அளித்துள்ளனர். இதே போல், டெல்லியிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என, பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக டெல்லி சட்டப்பேரவையில் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், "வரிவிலக்கு வேண்டும் என்றால், தி காஷ்மீர் படத்தை யூ-டியூபில் வெளியிடுங்கள்" என, நகைச்சுவையாக பதில் அளித்தார்.
இதற்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். இதனால் பாஜக கடும் அதிருப்தி அடைந்தது. இதைத் தொடர்ந்து, "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தில் காட்டப்பட்டுள்ள காஷ்மீரி இந்துக்களின் இனப் படுகொலையை, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேலி செய்வதாக பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இன்று, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாஜக யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், அவரது வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் அமைத்த தடுப்புகளையும் தாண்டி உள்ளே வந்த போராட்டக்காரர்கள், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள், தடுப்புகளை உடைத்து எறிந்தனர். மேலும், வீட்டின் கேட்டில் சிவப்பு நிற பெயின்ட்டையும் அடித்து விட்டு சென்றனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய பாஜகவினர், போலீசாரின் தடுப்புகளையும் மீறி உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக முயற்சி செய்து வருகிறது. தேர்தலில் அவரை தோற்கடிக்க முடியாததால் இது போன்ற நாச வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. போலீசாரின் உதவியுடன் பாஜக குண்டர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். பாஜகவினரை தடுத்து நிறுத்தாமல் வன்முறைக்கு போலீசாரும் துணை புரிந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறியதாவது:
காலை 11:30 மணி அளவில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக வெளியேற்றி விட்டோம். இது தொடர்பாக 70 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மதியம் 1 மணி அளவில் போராட்டக்காரர்களில் சிலர் தடுப்புகளை தாண்டி உள்ளே சென்று முதலமைச்சர் வீட்டில் சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி உள்ளனர். சிலர் கதவுகளுக்கு பெயின்ட் அடித்து சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment