ஐ.ஐ.டி., ஆன்லைன் படிப்பில் 12 ஆயிரம் பேர் அட்மிஷன்
சென்னை ஐ.ஐ.டி.,யின் பி.எஸ்சி., ஆன்லைன் படிப்பில், தமிழகத்தை சேர்ந்த 1,700 பேர் உள்பட, 12 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். அவர்களில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களும் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் சார்பில், &'பி.எஸ்சி., டேட்டா சயின்ஸ்&' படிப்பு ஆன்லைன் வழியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 படித்து, எந்த படிப்பும் முடித்த எந்த வயதினரும் இதில் சேரலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த படிப்பு துவங்கி, ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 12 ஆயிரம் பேர் படிப்பில் சேர்ந்து விட்டனர்; 12 ஆயிரத்து 500 பேர் சேர்க்கைக்கு தயாராகி உள்ளனர்.
இந்த படிப்பில், 20 முதல் 79 வயது வரையுள்ளவர்கள் சேர்ந்துள்ளனர். 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் 3,488 பேர்; 29 வயது வரையுள்ள, 7,016 பேர் இடம் பெற்றுள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட, 125 பேர் உள்ளனர். இவர்களில், 8,662 பேர் மாணவர்கள்; 981 பேர் வேலை தேடுபவர்கள்; 2,445 பேர் வேலை பார்ப்பவர்கள். படிப்பில் சேர்ந்தவர்களில் 5,304 பேர் இன்ஜினியரிங்; 2,500 பேர் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படித்தவர்கள்.
நாட்டில் உள்ள 33 மாநிலங்களை சேர்ந்தவர்களும், ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், அதிகபட்சமாக தமிழகத்தில் இருந்து 1,718 பேர் படிப்பில் சேர்ந்துள்ளனர்; 180 பேர் முழுமையாக உதவி தொகையுடன் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி கூறியதாவது:
டேட்டா சயின்ஸ் என்ற தரவு அறிவியல் படிப்பு, உலகம் முழுதும் அதிகம் தேவைப்படும் படிப்பாக உள்ளது. இதை எவ்விதமான வரையறையும் இல்லாமல், அனைத்து தரப்பினரும் படிக்கும் வகையில், ஆன்லைன் வழியே அறிமுகம் செய்துள்ளோம். சென்னை ஐ.ஐ.டி.,யின் உயர்ந்த தொழில்நுட்பத்தில், இந்த படிப்பை மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்கலாம்.
முதல்வரை நான் சந்திக்கும் போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் பயிற்சி அளிப்பர் என்றேன். அதன்படி, சென்னையில் உள்ள, 35 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களை சந்தித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, பேராசிரியர்கள் விக்னேஷ் முத்துவிஜயன், ஆண்ட்ரூ தங்கராஜ் ஆகியோர், டேட்டா சயின்ஸ் படிப்பு குறித்த கூடுதல் தகவல்களை பகிர்ந்தனர்.
மேலும், ஆன்லைன் படிப்பில் சேர்ந்த பல்வேறு கிராமப்புற மாணவ, மாணவியர், தங்களுக்கு இந்த படிப்பு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், ஐ.ஐ.டி.,யின் கல்வி உதவி தொகையுடன் படிப்பில் சேர்ந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment