16 ஆண்டில் முதல் முறையாக டிவிட்களை திருத்தும் வசதியை அறிமுகப்படுத்துகிறது டிவிட்டர்
டிவிட்டரில் பதிவிட்ட டிவிட்களில் பிழை திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள, ‘எடிட் பட்டன் கொண்டு வருவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என கடந்த 1ம் தேதி டிவிட்டரின் அதிகாரப்பூர்வ கணக்கில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ல் கூறப்பட்டதால், அது உண்மையான தகவலாக இருக்காது என பெரும்பாலானோர் நம்பினர். இந்நிலையில், டிவிட்டரின் செய்தித் தொடர்பாளர் கேத்தரின் ஹில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘எடிட் பட்டன் மூலம் எதை செய்ய முடியும், எதை செய்ய முடியாது, எது சாத்தியம் என்பதை அறிய, சோதனை அடிப்படையில் இந்த வசதி கொண்டு வரப்படும். முதலில் கட்டண சேவையான டிவிட்டர் ப்ளூவில் விரைவில் இந்த வசதி கொண்டு வரப்படும்,’’ என்றார். ஆனால், அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படுமா என்பது குறித்து அவர் கருத்து கூறவில்லை.
கடந்த 2006ம் ஆண்டு டிவிட்டர் தொடங்கப்பட்டதில் இருந்து இந்த ‘எடிட்’ வசதியை கொண்டு வரவில்லை. இதற்கு காரணம் அதன் முந்தைய தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சி, ‘நாங்கள் அதை ஒருபோதும் செய்ய மாட்டோம். எடிட் பட்டனை சேர்ப்பது டிவிட்டரின் இயல்பை மாற்றும். டிவிட்களில் திருத்தம் செய்வதன் மூலம் நம்பகத்தன்மை பறிபோகும்,’ என்றார். ஜோர்சி கடந்தாண்டு சிஇஓ பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க் காரணமா?:
சமீபத்தில் டிவிட்டரில் 9 சதவீத பங்குகளை வாங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், டிவிட்டரின் நிர்வாக குழுவிலும் இணைந்துள்ளார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன், டிவிட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என கருத்துக்கணிப்பு நடத்தினார். அதற்கு 40 லட்சம் பேர் ஆதரவாக வாக்களித்தனர். இருப்பினும், ‘எலான் மஸ்க்கால் இந்த எடிட் வசதி கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே, ஓராண்டாக இதற்கான பணிகள் நடந்து வந்தது,’ எனடிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment