2.4 லட்சம் பேருக்கு வேலை - புதிய திட்டம்: ஒன்றிய அரசு ஒப்புதல்
ஜவுளித்துறையில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான ரூ.19,000 கோடி திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒன்றிய அரசு தொழிற்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஜவுளித்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. ஜவுளித் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாக ரூ.19,000 கோடி மதிப்பிலான உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு (பிஎல்ஐ) ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இது குறித்து ஒன்றிய ஜவுளி துறை செயலாளர் யு.பி.சிங் கூறியதாவது: ஜவுளி துறையில் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்காக மொத்தம் 67 ஜவுளி நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்திருந்தன. அதில், 61 நிறுவனங்களின் விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. ரூ.19 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்க உள்ள இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 84 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், புதிதாக 2 லட்சத்து 40 ஆயிரத்து 134 வேலைவாய்ப்புகள் உருவாகும். மெகா முதலீட்டு ஜவுளி பூங்காக்கள் திட்டத்தின் கீழ் 13 மாநிலங்களில் இருந்து 17 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், மபி.யில் இருந்து 4, கர்நாடகாவில் இருந்து 2 விண்ணப்பங்களும் கிடைக்க பெற்றுள்ளன. முதல் கட்டமாக 7 ஜவுளி பூங்காக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து தெரிந்து கொள்ள ஒன்றிய அரசு அதிகாரிகள் குழு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment