தலைமை ஆசிரியைக்கு எதிராக 8ம் வகுப்பு மாணவர்கள் தர்ணா - அதிகாரியிடம் புகார்
கெலமங்கலம் அருகே தலைமை ஆசிரியையை கண்டித்து, மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் கோப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 77 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியில் 4 ஆசிரியர்கள், 3 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தலைமை ஆசிரியராக லலிதா(56) பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி, வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் பள்ளியை ஆய்வு செய்த போது, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள், தங்களுக்கு தலைமை ஆசிரியை சரியாக பாடம் எடுப்பதில்லை என புகார் கூறியுள்ளனர்.
இதையறிந்த தலைமை ஆசிரியை, பள்ளி கழிவறைக்கு பூட்டு போட்டதோடு, மாணவ, மாணவிகளிடம், என் மீது என்ன புகார் கூறினீர்கள்? எனக்கேட்டு மாணவர்களை வகுப்புக்கு வரக்கூடாது என திட்டி அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 10 மணி முதல், 8ம் வகுப்பு மாணவர்கள் வகுப்புக்கு செல்லாமல், தலைமை ஆசிரியையை கண்டித்து, பள்ளி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த கெலமங்கலம் போலீசார், பள்ளிக்கு சென்று விசாரித்து கல்வி துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளிக்கு வந்த வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார், ‘தலைமையாசிரியர் மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்து, அனைவரையும் வகுப்புக்கு செல்லும்படி கூறி அனுப்பி வைத்தார். மாணவர்கள் அதையேற்று வகுப்புக்கு சென்றனர்.
No comments:
Post a Comment