பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை முக்கிய தகவல்கள்
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்; அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அனைவருக்கும் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திட்டம். முதல் முறையாக கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன்கருதி பல திட்டங்கள் கொண்டு வரப்படுகிறது. அரசு மேல்நிலை வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்ப பாடமாக பயிலும் மாணவர்களிடம் 2022 -23ம் கல்வி ஆண்டில் இருந்து ரூ.200 தனி கட்டணம் வசூலிக்கப்படுவது முழுமையாக ரத்து செய்யப்படும்.
கொரோனாவால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவே இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தியாவின் முன்னோடி திட்டமாக இது செயல்படுகிறது. 4 ஆண்டுகளில் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 6,029 அரசுப் பள்ளிகளில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் அமைக்கப்படும். 2713 நடுநிலைப்பள்ளிகளில் ரூ210 கோடி மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். ஆசிரியர் பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மாடல் பள்ளிகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.150 கோடி மதிப்பீட்டில் 7,500 திறன் வகுப்பு அறைகள் அமைக்கப்படும்.
மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுப்பது தான் திராவிட மாடல் என முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கிராம, நகர பகுதிகளில் நூலக சேவை பெறாத இடங்களில் நூலக நண்பர்கள் என்ற புதிய திட்டம், தன்னார்வலர்கள் வாயிலாக நூலக சேவை. அரசுப் பள்ளிகளில் ரூ.25 லட்சம் செலவில் காய்கறித் தோட்டம் அமைக்கப்படும். சதுரங்க போட்டி குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் சதுரங்க போட்டிகள் நடத்தப்படும்; போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்படும்.
அனைவருக்கும் தேநீர் கொடுங்கள் என்றார் மார்க்ஸ்; சமமான அளவு கொடுங்கள் என்றார் பெரியார். ஒரே வகையான குவளையில் கொடுங்கள் என்றார் அம்பேத்கர். பசியுடன் இருப்பவர்களுக்கு முதலில் கொடுங்கள் என்றார் கலைஞர். தேநீரை இலவசமாக கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின் எனவும் கூறினார்.
No comments:
Post a Comment