ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, சம்பளம் பெறுவது தற்காலிகமாக நிறுத்தம்
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து, சம்பளம் பெறுவது, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஈட்டிய விடுப்பாக 15 நாட்கள் அறிவிக்கப் பட்டு உள்ளது. அதை எடுக்க முடியாதவர்களுக்கு ஆண்டு முடிவில், 15 நாட்களுக்கான முழு ஊதியம் எவ்வித பிடித்தமும் இல்லாமல் வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கு சேர்த்து, ஒரு மாத ஊதியமாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறையும் அமலில் உள்ளது.
கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு, அதிக அளவில் நிதி தேவைப்பட்டால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த ஈட்டிய விடுப்பு, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் விடுப்பு கணக்கில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு ஈட்டிய விடுப்புக்கு ஊதியம் பெறுவதை, 2022 மார்ச் 31 வரை நிறுத்தி வைத்து, அரசாணை வெளியிடப்பட்டது. ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஈட்டிய விடுப்பிற்கு ஊதியம் பெறலாம் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இந்நிலையில், ஈட்டிய விடுப்புக்கு சம்பளம் பெறுவது, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சிகள், வாரியங்கள், பல்கலைகள், ஆணையங்கள் போன்றவற்றில் பணி புரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என, மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment