தொடர்ந்து பள்ளிக்கு வராத மாணவர்கள்; ஆசிரியர்கள் விபரம் சேகரிப்பு
பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு, 15 நாட்களுக்கு மேல் வராத மாணவர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கால், மாணவர்கள் இடையே கற்றல் இடைவெளி ஏற்பட்டது. தற்போது, வழக்கம்போல், பள்ளிகள் செயல்படும் நிலையில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் வகையில், தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், பல அரசுப்பள்ளிகளில், மேல்நிலை வகுப்பு மாணவர்களின் வருகை, முழுமையாக பூர்த்தியடையவில்லை. இந்நிலையில், உடுமலை கல்வி மாவட்டத்தில், பள்ளி செல்லா குழந்தைகளைக்கண்டறியவும், தொடர்ந்து பள்ளிக்கு, 15 நாட்களுக்கு மேல் வராத மாணவர்களின் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பள்ளி செல்லா, இடைநிற்றல் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிதல் பணி நடந்து வருகிறது. ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், வெளி மாநிலங்களில் இருந்து, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களில் பணிபுரிய குடியேறியவர்களின் குழந்தைகள் உள்ள பகுதிகளில், கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அவ்வாறு குழந்தைகள் கண்டறியப்பட்டால், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத மாணவர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. பெயர், பெற்றோர் பெயர், தொடர்பு எண், எமிஸ் எண் உள்ளிட்ட அவர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு, கூறினர்.
No comments:
Post a Comment