RTI கேள்விக்கு 9,000 பக்க பதில்
கட்டுமான திட்டம் தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்கும் வகையில், 45 கிலோ எடையில், 9,000 பக்க ஆவணங்களை, வீட்டுவசதி வாரியம் அனுப்பியுள்ளது.
சென்னை அம்பத்துாரில், வீட்டுவசதி வாரிய ஜெ.ஜெ., நகர் கோட்டம் சார்பில், 2,394 வீடுகள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு கட்டடமும், 19 மாடிகள். இந்த பணியில், பல்வேறு கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு ஒப்பந்ததாரரின் பணி மீது சந்தேகம் எழுந்தது.இதனால், அயப்பாக்கத்தை சேர்ந்த தகவல் உரிமை சட்ட ஆர்வலர் கவி காசிமாயன், வீட்டுவசதி வாரியத்துக்கு, 15 கேள்விகளை அனுப்பினார்.
இதற்கு பதிலாக, 45 கிலோ எடையில், 9,000 பக்க ஆவணங்களை வீட்டுவசதி வாரியம் அனுப்பி உள்ளது.இது குறித்து, கவி காசிமாயன் கூறியதாவது:அம்பத்துார் குடியிருப்புதிட்டத்தில், ஒரு பகுதி பணிக்கான ஒப்பந்ததாரர், நாமக்கல்லில் கட்டிய அரசு கட்டடம் இடிந்து விழுந்தது. எனவே, இத்திட்டம் குறித்த சந்தேகம் எழுந்தது.
அது குறித்த சந்தேகம் கேட்டதற்கான பதில் தான் இது.இதை ஆய்வு செய்ததில், வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகியோர், பல்வேறு பிரதிகளில் போட்டுள்ள கையெழுத்துகளிலும், கட்டட அளவுகளிலும் குளறுபடி இருப்பது தெரிகிறது. இது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment