ரேஷன் அட்டைக்கு 2000ரூ: இன்று இல்லை, எப்போது தெரியுமா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சரிவைச் சந்தித்திருந்த நேரம். அப்போதே திமுக தனது தேர்தல் அறிக்கையில் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. கலைஞரின் பிறந்தநாள் அன்று ஜூன் 3ஆம் தேதி இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஜூன் மாதம் வரை காத்திருக்காமல் முதல் தவணையாக 2000 ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இப்போதைய ஒரே தீர்வு முழு பொதுமுடக்கம் தான் என மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது.
பொதுமுடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இன்றே நிவாரண நிதி திட்டம் தொடங்கி வைக்கப்படுவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “கொரோனா நிவாரண நிதி உணவுப்பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் வழங்கப்பட உள்ளது. அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் சுமார் 2,07,66,950 பேருக்கு சுமார் ரூ. 4,153 கோடி நிதி வழங்கப்பட உள்ளது. இந்த முதல் தவணையாக ரூ. 2000 வழங்கும் திட்டத்தை வரும் 10ஆம் தேதி (இன்று) சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதன்பின்னர் 10ஆம் தேதி முதல் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நியாய விலைக்கடையிலும், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைக்கு பணம் சென்றவுடன் ரூ. 2000 வழங்கப்படும். கொரோனா காலம் என்பதால் டோக்கன் வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி முதல் தவணை பணம் இந்த மே மாதத்திற்குள் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
அதன்படி இன்று முதல் வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்படும். மே 15ஆம் தேதி முதல் 2000ரூ மக்களிடம் நேரடியாக விநியோகிக்கப்படும்.
No comments:
Post a Comment