எழுவர் விடுதலை: எதிர்ப்பாளர்களுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

எழுவர் விடுதலை: எதிர்ப்பாளர்களுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்!

எழுவர் விடுதலை: எதிர்ப்பாளர்களுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்!


எழுவர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் தேவையற்ற வகையில் நீண்ட காலத் தாமதம் செய்யும் பிரச்னையில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருப்பதை வரவேற்கிறேன். ஆனால் தமிழகத்தில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் இதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், எழுவர் விடுதலையை எதிர்ப்பவர்களுக்கு தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “30 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் வாடும் எழுவரும் உண்மையில் அந்தக் கொலையில் தொடர்பில்லாதவர்கள் என்பதை இந்த வழக்கை விசாரித்த சி. பி. ஐ-யின் உயர் அதிகாரிகளாக இருந்த ரகோத்தமன், தியாகராசன் ஆகிய இருவரும் புலனாய்வில் பல தவறுகள் இழைக்கப்பட்டதாகவும் குளறுபடிகள் நேர்ந்ததாகவும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு பகிரங்கமாக அறிவித்தனர்.


இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளுக்கு தலைமை தாங்கிய நீதியரசர் கே. டி. தாமஸ் ஓய்வு பெற்ற பிறகு “இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் கொலை வழக்கில் யாரும் தண்டிக்கப்படாமல் இருந்துவிடக் கூடாது என்று நாங்கள் கருதியதால் இவர்களை நாங்கள் தண்டித்தோம்” என தாங்கள் இழைத்தத் தவறை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார். இந்த உண்மைகள் எவற்றையும் புரிந்து கொள்ளாமலும், காங்கிரசுத் தலைவராக இருந்த ராகுல் காந்தி எழுவரை விடுதலை செய்வதில் தனக்கு எத்தகைய எதிர்ப்பும் இல்லை என அறிவித்தப் பிறகும் மனித நேய உணர்வு சிறிதளவு கூட இல்லாமல் தமிழக காங்கிரசுத் தலைவர்கள் இவ்வாறு அறிக்கைகள் வெளியிடுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறைவாசிகளை நீதிமன்றங்கள்தான் விடுதலை செய்ய வேண்டுமென இவர்கள் கூறுவது வரலாறு அறியாத போக்காகும். ஏற்கெனவே காந்தியடிகளின் நூற்றாண்டு விழாவின் போதும் இந்தியா விடுதலை பெற்ற பொன் விழாவின் போதும் இந்திய குடியரசின் பொன் விழாவின் போதும் இந்தியா முழுவதிலும் நீண்ட காலமாகச் சிறையிலிருந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள் அனைவரையும் காங்கிரசு அரசுகள் உட்பட பல்வேறு கட்சி அரசுகளும் விடுதலை செய்துள்ளன. எனவே குடியரசுத் தலைவர் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு எழுவர் விடுதலை குறித்த பிரச்னையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக ஆளுநருக்கு அறிவுறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad