லட்சத்தீவுகளில் அடக்குமுறை.. நிர்வாகியை நீக்கும்படி சீமான் வலியுறுத்தல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, May 26, 2021

லட்சத்தீவுகளில் அடக்குமுறை.. நிர்வாகியை நீக்கும்படி சீமான் வலியுறுத்தல்!

லட்சத்தீவுகளில் அடக்குமுறை.. நிர்வாகியை நீக்கும்படி சீமான் வலியுறுத்தல்!



மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகி பிரஃபுல் கோடா பட்டேலை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியப் பகுதிகளில் ஒன்றான இலட்சத்தீவுகளுக்கான நிர்வாகியாக மத்திய அரசால் பணியமர்த்தப்பட்டுள்ள பிரஃபுல் கோடா பட்டேல் அவர்கள் கொண்டுவந்துள்ள புதிய சட்ட ஒழுங்குமுறையானது, வளர்ச்சி என்ற பெயரில் இலட்சத்தீவுகளின் தொன்மையையும் சுற்றுச்சூழலையும் பாதிப்பதுடன் அப்பகுதி மக்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலையும் சீர்குலைக்கும் வகையில் இருப்பதால் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்களை, இலட்சத்தீவு அரசு நிர்வாகம் கடுமையான அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்குவதாக வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன.

ஒன்றியப் பகுதிகளுக்கான இத்தகைய நிர்வாகப் பதவிகள், இந்தியக் குடிமைப்பணி அதிகாரிகளால் நிரப்பப்பட்டுவந்த வழக்கத்தை விடுத்து பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவராக அவரது குஜராத் அமைச்சரவையில் இருந்த பிரஃபுல் கோடா பட்டேல் மத்திய அரசால் நேரிடையாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலட்சத்தீவுக்கு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

பெரும் எண்ணிக்கையிலான இசுலாமிய மக்கள் நிறைந்து வாழ்கின்ற இலட்சத்தீவுக்கான நிர்வாகியாகப் பொறுப்பேற்றதிலிருந்து பிரஃபுல் கோடா பட்டேல் அவர்கள் முழு அடிப்படைவாதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், கட்டுப்பாடுகள் என்ற பெயரில் மக்களை அடக்கி ஆளுகிற கொடுங்கோன்மையாளராகவும் இருக்கிறார் என்பது அவரின் செயல்பாடுகளில் இருந்தே தெரிகிறது.

கொரோனா நோய்த்தொற்று இல்லாத பகுதியாக முன்பு அறியப்பட்ட இலட்சத்தீவுகள், பிரஃபுல் கோடா பட்டேலின் சீர்கெட்ட நிர்வாகப்போக்கினால் கொரானா நோய்த்தொற்று ஆபத்து‌ அதிகமுடைய பகுதியாக மாறிவிட்டது என்பதையும், அண்மையில் நடந்த செவிலியர்கள் போராட்டத்தை இலட்சத்தீவு அரசு நிர்வாகம் சரியாகக் கையாளாமல் அவர்களைக் கைது செய்து மனித உரிமைகளை மீறி முறையற்று நடந்து கொண்டது என்பதையும் பத்திரிக்கையாளர்களும், கேரள மாநிலத்தின் சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.



கால்நடை பராமரிப்பு துறையால் நடத்தப்பட்டு வந்த அனைத்து பால் பண்ணைகளையும் மூடி, அங்குள்ள கால்நடைகளையெல்லாம் ஏலத்தில் விற்றுவிட்டுக் குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து பால் உள்ளிட்ட பொருட்களைக் கொள்முதல் செய்து தனிப்பெரு முதலாளிகளின் இலாபவேட்டைக்காக அப்பகுதி மக்களின் வாழ்வியலையும் தற்சார்பு பொருளாதாரத்தையும் முற்றாக அழித்து வருகிறார் என்பதையும் எதிர்த்து அம்மக்கள் போராடி வருகிறார்கள்.

மேலும், இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இலட்சத்தீவு பகுதியில் மாட்டிறைச்சி உண்ணத் தடை விதிக்கப்படுவதும், அப்பகுதி மக்களின் பண்பாடு மற்றும் மத நம்பிக்கையின் அடிப்படையில் இதுவரையில் அங்கு நடைமுறையில் இருந்த மதுவிலக்கைத் தளர்த்தி, சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில் மதுபான உற்பத்திக்கும் மதுபானக்கடைகளுக்கும் தாராள அனுமதி கொடுக்கப்படுவதும், வளர்ச்சி என்ற பெயரில் சுரங்கம் மற்றும் நெடுஞ்சாலைப்பணிகளுக்காக அப்பகுதியின் தொன்மை மற்றும் சுற்றுச்சூழலைக் கெடுப்பதும் இலட்சத்தீவு பகுதி மக்களைப் பெரிதும் பாதிக்கின்ற செயல்களாக அமைந்திருக்கின்றன. அடிப்படைவாதத்தைத் திணிப்பது ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படும் இலட்சத்தீவு நிர்வாகியான பிரஃபுல் கோடா பட்டேலின் மதவெறிப்போக்கும், நிர்வாகச் சீர்கேடுகளும் வன்மையான கண்டனத்திற்குரியது.



ஆகவே, இவ்விவகாரத்தில் இலட்சத்தீவு பகுதியில் வாழும் மண்ணின் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலட்சத்தீவு நிர்வாகியாகப் பணியமர்த்தப்பட்டிருக்கிற பிரஃபுல் கோடா பட்டேலை உடனடியாகத் திரும்பப் பெற்று, அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறைப்படி, தகுதி வாய்ந்த இந்தியக் குடிமைப்பணி அதிகாரியை இலட்சத்தீவு பகுதிக்குப் புதிய நிர்வாகியாக நியமிக்க வழிவகைச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad