குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை!

குண்டர் தடுப்புச் சட்டம் பாயும்: ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை!


தமிழகத்தில் கொரோனா பரவல் மிக அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் தனியார் நிறுவனங்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர்களை மக்கள் விலைக்கு வாங்குகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சிலிண்டர்களை அதிக விலைக்கு பலர் விற்பனை செய்து வருகின்றனர்.

அதேபோல் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்துகளை வழங்குவதற்காக சென்னை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்துகளை பலர் கள்ளச் சந்தைகளில் விற்றுவருகின்றனர்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மக்களின் உயிர் காக்கும் பெரும் பொறுப்பை முதன்மைக் கடமையாக கொண்டு செயல்பட்டு வருகிறது எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு. அதற்கு நேர் எதிராக செயல்படுபவர்கள் போக்கை கடுமையான நடவடிக்கைகளால் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உலகளாவிய அளவில் குறிப்பாக இந்திய ஒன்றியத்திலும் இரண்டாவது அலை ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி வளையத்தில் இருந்து தமிழகமும் தப்பிக்கவில்லை. நாள்தோறும் அதிகரித்து வரும் நோய் தொற்று எண்ணிக்கையும், இழப்புகளையும் முழுமையாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்களுக்கான இந்த அரசு இரவு பகல் பாராது செயல்பட்டு வருகிறது. மேலும் இப்பணியில் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டு அதற்கேற்ப நல்லோர் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்கி வருகிறார்கள்.

எளிய மக்கள் கூட தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தில் ஏற்படும் பாதிப்பை தாண்டி அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஊரடங்கு எனும் கசப்பு மருந்தை விழுங்கி மக்களின் உயிரைக் காப்பதற்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். அதே நேரத்தில் சில சமூக விரோதிகள் மருந்துகளை பதுக்கி கள்ளச்சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

அதுபோலவே ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மிக அதிக விலைக்கு ஆங்காங்கே சிலர் விற்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் வருகின்றன. பேரிடர் காலத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது மிக கடுமையான குற்றமாகும். தடுப்பூசி இறக்குமதி, மருந்து வினியோகம், உற்பத்தி, படுக்கைகள் எண்ணிக்கை அதிகரித்தல், கட்டுப்பாட்டு மையங்கள் வாயிலாக உடனுக்குடன் சிகிச்சைக்கான ஏற்பாடு என தமிழக அரசு தொய்வின்றி தொடர்ச்சியாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் உயிரின் மீதும் அக்கறை கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வரும் நிலையில் அதற்கு மாறாக டெம்டெசிவர் மருந்துகளை பதுக்குவோர் மீதும் ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலையை உயர்த்தி விற்பனை செய்வோர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad