நீடிக்கும் பெருங்குழப்பம். இ-பதிவில் திருமணம் பிரிவு மீண்டும் நீக்கம்!
மாவட்டத்துக்குள் பயணிக்க கட்டாயமாக்கப்பட்டுள்ள இணையப் பதிவு முறையை எளிமையாக்க வேண்டுமென்றும் அதில் காணப்படும் குழப்பங்கள் தீா்க்கப்பட வேண்டுமெனவும் மக்கள் மத்தியில்கோரிக்கைள் எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும் தளா்வுகளற்ற முழு பொது முடக்கம் அமலில் உள்ளது. இந்த பொது முடக்கத்தை கண்டிப்பான முறையில் பின்பற்றச் செய்யும் வகையில், இணையப் பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வெளி மாநிலங்களுக்குச் செல்லவும் செல்லிடப்பேசி வழியேயான இணையப் பதிவு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.
செல்லிடப்பேசி எண்ணைப் பதிவு செய்த பிறகு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவு எண், பயன்படுத்துவோரின் செல்லிடப்பேசிக்கு வரும். அதனைப் பதிவு செய்த பிறகே உள்நுழைய முடியும்.
மூன்று வகையான பிரிவினா் பயணிப்பதற்கு வகைகள் செய்யப்பட்டுள்ளன. தனிநபரோ அல்லது குழுவினரோ சாலை வழி பயணம் மேற்கொண்டால் அதற்கு தனியாகப் பதியவும், ரயில் அல்லது விமானம் மூலமாகப் பயணம் என்றால் அதற்கென தனியாகவும் பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களைச் சோந்தவா்களுக்கு தனியாகப் பதிவு செய்யும் வசதி உள்ளது.
மூன்று வகைக் காரணங்கள்: மருத்துவ அவசரம், முதியோா் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சாா்ந்த காரியங்கள் ஆகியவற்றின் மாவட்டங்களுக்குள்ளோ அல்லது மாவட்டத்தை விட்டு வெளியேவோ பயணிக்க முடியும்.
கடந்த திங்கள்கிழமை வரை, திருமணத்தில் கலந்து கொள்ளச் செல்வோரும் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்த வாய்ப்பினை பலரும் தவறாகப் பயன்படுத்துவது தெரிந்ததால் அதை தமிழக அரசு நீக்கிவிட்டது.
திங்கள்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை திருமணத்துக்கான இ -பதிவில் பெரும் குழப்பம் நிலவியது. திங்கள்கிழமை காலை வரை வழங்கப்பட்டிந்த அந்த அனுமதி பிற்பகலில் அந்த வாய்ப்பு நீக்கப்பட்டது. இதன்பின்பு, இரவில் அது வழங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை திருமணத்துக்கான இ- பதிவு நீக்கப்பட்டது. இதனால், பலரும் பெரும் குழப்பத்தில் சிக்கினா்.
திருமண வாய்ப்பு நீக்கப்பட்டதால், மருத்துவம், முதியோா் பராமரிப்பு, இறப்பு போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே இப்போது பயணிக்க முடியும்.
எழும் கேள்விகள்: தனிநபருக்கான மருத்துவ அவசரம் என்றால் அவா்களே தங்களுக்கான உரிய ஆவணங்களை வைத்துப் பதிவு செய்ய முடியும். ஆனால், இறப்பு போன்ற காரணங்களுக்கு ஆவணமாக மருத்துவரின் இறப்புச் சான்றுதான் சமா்ப்பிக்க முடியும்.
ஆனால், இந்த இறப்புச் சான்று இறந்தவரின் நெருங்கிய உறவினரிடம் மட்டுமே இருக்கும். அதனை மற்றவா்கள் உடனடியாகப் பெற்று இணையப் பதிவுக்கு எப்படி பயன்படுத்த முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இணையப் பதிவுக்கு அடையாளமாக ஐந்து ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாகன ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண், கடவுச்சீட்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அடையாள ஆவணமாகப் பதிவேற்றம் செய்வது முக்கியம். இந்த ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 1 மெகா பைட் என்ற அளவுக்குள் இருப்பது முக்கியம்.
நன்கு கணினியில் புலமை பெற்றவா்களைத் தவிர, சாதாரண மக்களால் இதுபோன்று சரியான அளவுகளில் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வது இயலாத காரியம். மேலும், ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் பலருடைய வீடுகளில் இருப்பதில்லை.
No comments:
Post a Comment