முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படியொரு சிக்கல்: எப்படி சமாளிக்கப் போகிறார்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, May 23, 2021

முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படியொரு சிக்கல்: எப்படி சமாளிக்கப் போகிறார்?

முதல்வர் ஸ்டாலினுக்கு இப்படியொரு சிக்கல்: எப்படி சமாளிக்கப் போகிறார்?


தமிழக அரசு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை சரிவைச் சந்தித்துள்ளது.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவை மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. உலகளவில் அதிக பாதிப்பும் உயிரிழப்பும் இந்தியாவில்தான் பதிவாகிறது. இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டு வலுவாக எழுந்துள்ளது. இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டாலும் தற்போது மூன்று தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் தேவையான இடங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்புவதில்லை.

நாட்டில் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படும் நிலையில் பல லட்சம் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு மத்திய அரசு வழங்கியது விமர்சனத்துக்குள்ளாகியது. உலகிலேயே பிரம்மாண்ட தடுப்பூசி திருவிழா என விளம்பரம் செய்தபோதும் தடுப்பூசிகளை அனுப்பவில்லை. பாதிப்புகளை கட்டுப்படுத்த தம்மாலான முயற்சிகளை மாநில அரசுகளே மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசிகளை மாநில அரசுகளே வெளிசந்தைகளில் வாங்கிக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியது.

எனவே தமிழக அரசு தடுப்பூசிகளுக்கான சர்வதேச டெண்டர் கோரியது. மூன்று மாதங்களுக்குள் ஐந்து கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அறிவித்தார். இதனால் விரைவில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த முறையிலும் சிக்கல் உருவாகியுள்ளது.

மாநில அரசுகள் தடுப்பூசிகளை வெளிச் சந்தைகளில் வாங்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்ததும் தமிழக அரசைப் போலவே பஞ்சாப் அரசும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. பஞ்சாபில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரம் என்ற அளவில் பதிவாகிறது. நேற்று (மே 23) மட்டும் 201 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தடுப்பூசிகளைப் பெற சர்வதேச டெண்டர் கோரினார். ஸ்பூட்னிக் வி, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன், மாடர்னா ஆகிய நிறுவனங்களிடம் டெண்டர் கோரியது. அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் அந்நிறுவனம் நேரடியாக மத்திய அரசுக்கு மட்டுமே தடுப்பூசிகளை விநியோகம் செய்வோம் என்றும் மாநில அரசுகளுக்கு வழங்க முடியாது எனக் கூறியுள்ளது. அதேபோல் பைசர் நிறுவனமும் இதே பதிலை தெரிவித்துள்ளது. மற்ற நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பஞ்சாப் அரசு சந்திக்கும் இந்த சவால்களை தமிழக அரசும் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை பெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது. மத்திய அரசும் தடுப்பூசிகளை வழங்காத நிலையில் வெளிச்சந்தையிலும் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினையைப் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த பிரச்சினைக்கு தமிழக அரசு தீர்வு கண்டால் மட்டுமே பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

No comments:

Post a Comment

Post Top Ad