இந்தியாவால் இப்படியொரு ஆபத்து; எல்லையை மூடி சீல் - தடை மேலும் நீட்டிப்பு!
சீனாவில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது. கடந்த ஆண்டு முதல் அலையின் போது சீனாவின் மீது உலக நாடுகள் பெரும் கோபத்தில் இருந்தன. இந்நிலையில் இரண்டாவது அலையில் இந்தியாவின் மீது பல்வேறு நாடுகளும் கோபம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ் அண்டை நாடுகளுக்கு பரவியிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இருந்து வங்கதேசம் திரும்பிய 6 பேருக்கு இந்திய உருமாறிய வைரஸான B.1.617 கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் நிலைமை சீரடையும் வரையில் எல்லையை மூடுமாறு அந்நாட்டு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியது. அதன்பேரில் இந்தியா உடனான தனது எல்லையை வங்கதேச அரசு கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி மூடி உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த தடையை மேலும் 14 நாட்கள் மூடி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே அறிவித்தபடி அத்தியாவசிய மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு எந்தவித தடையும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய வங்கதேச சுகாதாரச் சேவை பொது இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் நஸ்முல் இஸ்லாம்
முன்னா, வங்கதேசத்தில் ஒரே நாளில் 6 பேருக்கு இந்திய உருமாறிய வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் இருவர் தலைநகர் டாக்காவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மேலும் பலரும் நோய்த்தொற்று கண்டறியப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஏராளமானோர் கடந்த சில வாரங்களில் வங்கதேசம் திரும்பியிருப்பதாக தெரிவித்தார்.
No comments:
Post a Comment