கொரோனா காலத்திலும் "வித் அவுட்" - ரூ.143 கோடி வசூல்
கடந்த நிதியாண்டில் நாடு முழுவதும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்த 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக 143 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு, ரயில்வே வாரியம் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், நாடு முழுவதும், ரயிலில் உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக 27.57 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு அபராதமாக 143.82 கோடி ரூபாய் விதிக்கப்பட்டது.
கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில், இதே போல், பயணச்சீட்டு இல்லாமல் 1.10 கோடி பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து, 561.73 கோடி ரூபாய் அபாரதமாக வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'கொரோனா சூழல் காரணமாக ரயில்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே கடந்த நிதியாண்டில் பயணச்சீட்டு இல்லாமல் பிடிபட்டோரின் எண்ணிக்கை 25 சதவீதம் அளவுக்கு குறைந்ததற்கு காரணம்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment