நீட் தேர்வு ரத்து.. மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு நடைபெறாது என முதல்வர்
மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்குவது என முடிவு செய்ய குழு அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நீட் உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக சிபிஎஸ்சி அறிவித்துள்ளது.
உயர்கல்வி வாய்ப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்களே அடிப்படையாக இருக்க வேண்டுமென்பது எனது அரசின் உறுதியான கருத்து. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இந்தாண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்யவும் முடிவு செய்துள்ளோம்.
மாணவர்களுக்கு மதிப்பு வழங்குவது குறித்து முடிவு செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும்.
இந்த சூழலில், எந்தவொரு தொழிற்கல்விக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை நடத்துவது மாணவர்களின் நலனுக்கு ஆபத்தானது. எனவே, நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
எப்போதும் நாங்கள் வலியுறுத்துவதை போல எங்கள் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். சீட் உள்பட அனைத்து தொழிற்கல்வி படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment