"டிக் டாக்" ஆப் மீதான தடை நீக்கம்! எங்கு தெரியுமா?
அமெரிக்காவில், சீனாவைச் சேர்ந்த டிக் டாக், வீ சாட் ஆகிய செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபராக, ஜனநாயக் கட்சியின் ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்து, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாக உத்தரவுகள் பலவற்றை நீக்கி வருகிறார். அதிபராக பணிகளை தொடங்கிய முதல் நாளிலேயே, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றில் மீண்டும் அமெரிக்கா இணையும் உத்தரவில், அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். இதிலிருந்து, டொனால்டு டிரம்ப் விலகியிருந்தார். மெக்சிகோவிலிருந்து அகதிகள் நுழையாமல் தடுக்க நீண்ட எல்லை சுவர் கட்டும் பணிகளை அதிபர் பைடன் நிறுத்தினார்.
சீன செயலிகளான, டிக் டாக் மற்றும் வீ சாட்டிற்கு முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தடை விதிக்க முயன்றார். புதிய பயனர்கள் அவ்விரு செயலிகளையும் பதிவிறக்கம் செய்ய முடியாதபடி தடை உத்தரவு பிறப்பித்தார். நடைமுறைக்கு வராத அந்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் தடுத்தன.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன், டிக் டாக், வீ சாட்டிற்கு எதிரான, டொனால்டு டிரம்பின் நிர்வாக உத்தரவுகளை ரத்து செய்து கையெழுத்திட்டு உள்ளார். அதே சமயம் அந்த செயலிகள் கொண்டிருக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றி ஆராய புதிய வணிக துறை ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். முன்னர் தனியாக அமைக்கப்பட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆய்வும் தொடரும் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment