தமிழ்நாட்டில் கடைகள் திறப்பு: வணிகர்கள் சங்கம் வச்ச ‘நச்’கோரிக்கை!
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் தினந்தோறும் புதுப்புது உச்சங்களை எட்டிய நிலையில் மே 24ஆம் தேதி முதல் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கிலிருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த ஊரடங்கில் காய்கறி, மளிகை கடைகள் திறக்கவும் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் அதிகாரிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில் வர்த்தகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா விரைவில் கடைகள் திறக்க அனுமதிக்க கோரி முதல்வரிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு வேண்டிய மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட விக்கிரமராஜா, “தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மீண்டும் கடைகளைத் திறக்க அனுமதிக்க கோரி முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடு, வீடாகச் சென்று பொருட்கள் விற்பனை செய்யும் புதிய வியாபாரிகள், அதிக லாப நோக்கில்லாமல் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும். மீறினால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும்” என்று கூறினார்.
“சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் கடைகளில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வியாபாரிகள் வாங்கியுள்ள கடனுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து ஆறு மாதக் காலம் அவகாசம் தர வேண்டும். இதற்கு ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment