காலியாகும் தமாகா கூடாரம்: திமுகவுக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, June 17, 2021

காலியாகும் தமாகா கூடாரம்: திமுகவுக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்?

காலியாகும் தமாகா கூடாரம்: திமுகவுக்கு படையெடுக்கும் நிர்வாகிகள்?



மத்திய சென்னை மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் ராம்குமார் கட்சியின் விதிகளுக்கு மாறாக செயல்பட்டதால் உடனடியாக மாவட்ட தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக சென்னை மாமன்ற முன்னாள் உறுப்பினர் கோவிந்தசாமி மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் (பொறுப்பு) ஆக நியமிக்கப்படுகிறார்'' என கூறியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 6 இடங்களே ஒதுக்கப்பட்டன. அதுவும் தமாகாவின் முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள் கேட்ட தொகுதிகள் மறுக்கப்பட்டு அதிமுக தலைமையின் விருப்பப்படியே 6 தொகுதிகள் வழங்கப்பட்டன. அந்த ஆறு தொகுதிகளிலும் தமாகா தோல்வியைத் தழுவியது.

இதனால் தேர்தல் சமயத்தில் வால்பாறை சட்டமன்றத் தொகுதி கிடைக்காததாலும், வேறு சில காரணங்களாலும் துணைத் தலைவராக இருந்த கோவை தங்கம் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

தற்போது மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் அண்ணாநகர் ராம்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய, அவரை தொடர்ந்து இளைஞர் அணியைச் சேர்ந்த கார்த்திக், விருகை முத்து, சைதை துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ராஜினாமா குறித்து ராம்குமார், ''தேர்தல் முடிந்த உடன் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாக இளைஞரணி தலைவர் யுவராஜ் போஸ்டர் அடித்திருந்திருந்தார். அதில் தலைவர் பெயரோ, படமோ இடம் பெறவில்லை. தலைவர் படம் இல்லாமல் எப்படி போஸ்டர் அடிக்கலாம் என்று கேள்வி கேட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது நடவடிக்கை எடுத்தனர். அதனால் தான் மாவட்ட தலைவர் பதவியை ராஜினமா செய்தேன்'' என்றார்.

தமாகாவிலிருந்து சென்று திமுகவில் ஐக்கியமான கோவை தங்கம் முன்னிலையில் ராம்குமார், அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் இன்னும் சில மாவட்ட தலைவர்கள் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad